செய்திகள்

ஆயுதம் போல பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை, சிபிஐ: ஜெர்மனியில் ராகுல் குற்றச்சாட்டு

Makkal Kural Official

பெர்லின், டிச. 23–

அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உள்ளிட்டவைகளை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியில் குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், கூட்டத்தொடர் நிறைவடைவதற்கு முன்னதாகவே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை பா.ஜ.க.வினர் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 15ம் தேதி பெர்லின் நகருக்குச் சென்ற ராகுல் காந்தி, வெளிநாடு வாழ் இந்தியர்களைச் சந்தித்து பேசினார்.

இதனிடையே கடந்த வாரம் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தில் ராகுல் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் ராகுல் காந்தி பேசும்போது, “அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை ஆளும் பாஜக அரசு ஒரு ஆயுதம் போல பயன்படுத்தி வருகிறது.

பாஜக மீது அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை இரண்டும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஒரு தொழிலதிபர் காங்கிரசை ஆதரித்தால் அவர் உடனடியாக அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகிறார். காங்கிரஸ் கட்சிதான் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற துறைகளை உருவாகியது. அவற்றை ஒருபோதும் சொந்த துறைகளாகப் பார்க்கவில்லை.ஆனால் பாஜக இதை இப்படிப் பார்க்கவில்லை. அவர்கள் தங்களுக்குச் சொந்தமான ஒன்றாகப் பார்க்கிறார்கள். அரசியல் அதிகாரத்தைக் கட்டியெழுப்ப அமலாக்கத்துறையையும், சிபிஐயும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் பாஜகவை எதிர்த்துப் போராடவில்லை. இந்தியாவில் உள்ள அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற துறைகளை காப்பற்றுவதற்காகவே போராடுகிறோம்” எனத் தெரிவித்தார்.

பாஜக விமர்சனம்

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பேசியதாவது:–

மீண்டும் ஒருமுறை தான் எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, பொய்ப் பிரசாரத்தின் தலைவர், சுற்றுலாத் தலைவர் மற்றும் தப்பியோடும் தலைவர் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துள்ளார். அவர் குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டு ஓடிவிடுகிறார்.நமது நாட்டை அவமதிக்கும் கலையில் ராகுல் காந்தி கைதேர்ந்தவராக இருக்கிறார். இந்தியாவின் நிறுவனங்கள் கைப்பற்றப்பட்டுவிட்டதாக பெர்லினில் ராகுல் கூறுகிறார். இந்திய மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள் என்று கூறுகிறார்.அவரின் ஒரே நோக்கம் இந்தியாவுக்கு எதிரான சோரோஸின் முகவர்களைச் சந்திப்பதுதான். வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் பரப்பும் இல்ஹான் ஓமர், சலில் ஷெட்டி போன்றோரைச் சந்திப்பதுதான் அது எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைவதற்கு முன்னதாகவே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஜெர்மனிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு பாஜகவினர் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *