மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில்
மதுரை, ஜன. 25–
மதுரை அருகே கொட்டாம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆம்னி பஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து நேற்றிரவு நெல்லைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை மதுரை கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு ஏற்கனவே சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு ஆம்னி பஸ்சானது சாலையோரம் நின்று கொண்டிருந்தது.பயணிகள் டீ குடிப்பதற்காக அந்த பஸ்சானது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி முழுக்க சேதமடைந்தது. நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்புறம் சேதமடைந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த செங்கல்பட்டை சேர்ந்த சுதர்சன் (23), தூத்துக்குடியை சேர்ந்த கனகரத்தினம் (65) மற்றும் திவ்யா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பஸ் விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த விபத்து குறித்து மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]()





