செய்திகள்

ஆமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன. 23–

ஆமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. கடுமையான நிதிச்சுமை, இழப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டியும் முதலீட்டை விலக்குதல் கொள்கையை பின்பற்றி மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஏர் இந்தியாவை விற்பதாக அறிவித்தது. இந்தியாவின் முன்னணி கோடீஸ்வர நிறுவனங்களான அம்பானி, அதானி, டாடா குழுமம் உள்ளிட்டவை ஏலத்தில் போட்டாபோட்டி போட்டன.

இதில் டாடா குழுமம் வெற்றிப்பெற்றது. அந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளுடன் கூடுதலாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தையும் ரூ.18 ஆயிரம் கோடி கொடுத்து மத்திய அரசிடம் இருந்து விலைக்கு வாங்கியது. 2022-ல் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்களை இயங்கி வருகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே டாடா நிறுவனத்துக்கு சறுக்க தொடங்கியது. ஏற்கனவே அந்த நிறுவனம் மீது சுமந்தப்பட்ட கடனையும் தீர்க்க வேண்டும், கிட்டத்தட்ட திவாலான நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், பயணிகளுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு அழுத்தங்களுக்கு டாடா ஆளானது.

இதன் நீட்சியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆமதாபாத் விமான விபத்து நடந்தது. ஆமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற அந்த ஏர் இந்தியா விமானம் ஒருசில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் செருகியது. இந்த கோர விபத்தில் வெளிநாட்டுகாரர்கள் உள்பட 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். விமான நிறுவனத்தின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்பட்டாலும் விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

இந்த விபத்து சம்பவத்துக்கு பின்னர் ஏர் இந்தியா நிறுவனத்தின் மீதான மதிப்பும், நம்பிக்கையும் பயணிகளிடையே குறைய தொடங்கியது.

இந்தநிலையில் ஏர் விமான நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான நிதியறிக்கையை தயாரித்து வெளியிடவுள்ளது. அதில் அந்த நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது மத்திய அரசிடம் இருந்து அந்த நிறுவனத்தை கொள்முதல் செய்யப்பட்ட தொகையில் 83 சதவீதம் ஆகும். ஆமதாபாத் விமான விபத்து, இந்தியா-பாகிஸ்தான் மோதல் உள்ளிட்டவை இந்த நஷ்டத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நஷ்டமே இல்லாமல் இயங்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் தற்போது லாபம் அடைவதே சாத்தியம் இல்லாதநிலை ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *