புதுடெல்லி, ஜூலை 28–
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று மக்களவையில் விவாதம் நடைபெற இருந்த நிலையில், அதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இருஅவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.அதேவேளை, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்கள் குறித்து இன்று முதல் விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, இரு அவைகளிலும் தலா 16 மணிநேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை கூடியது. அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் மதியம் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார், ஆனாலும் அமளி தொடர்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு
இதனை தொடர்ந்து மீண்டும் 12 மணிக்கு அவை கூடியதும் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேச இருந்தனர்.ஆனால், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் தொடங்கியதுமே பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் ராணுவ பதிலடி நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறும் போது எதிர்க்கட்சிகள் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் மொழியில் பேசாதீர்கள்
இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் விவாதம் தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:–
இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்ய வேண்டாம், பாகிஸ்தானின் மொழியில் பேச வேண்டாம். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரை நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்திய பாதுகாப்பு படைகளின் கண்ணியத்தை நாம் பராமரிக்க வேண்டும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அறிக்கைகளையும் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.இந்திய மக்களின் விருப்பத்தின் பேரில்தான் பிரதமர் இந்திய ராணுவத்தின் மூலம் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்க முடிவு செய்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஆப்பரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் இன்று மக்களவையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





