செய்திகள்

‘ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராகுல் சிறுபிள்ளைத்தனமான பேச்சு: பிரதமர் மோடி தாக்கு

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக. 5–

‘ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமான பேசியுள்ளார். உச்சநீதிமன்றம் கூட அவரைக் கண்டித்துள்ளது’ என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில், ‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், ‘‘ஆபரேஷன் சிந்தூர்’’, ‘‘ஆபரேஷன் மகாதேவ்’’ உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளின் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மோடிக்கு மாலை அணிவித்தபோது, எம்.பி.க்கள் அனைவரும் ‘‘ஹர ஹர மகாதேவ்’’ என்று மகிழ்ச்சியோடு முழக்கம் எழுப்பினார்கள்.

மேலும், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்திய பாதுகாப்புப் படையின் துணிச்சலைப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சிகளின்

எதிர்ப்புக்கு நடுவில்…

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கூட்டணி சார்பில் இந்த முக்கிய கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

‘‘சிறுபிள்ளைத்தனமாக

நடக்கும் ராகுல்’’

‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்புவதன் மூலம் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள். இதுபோன்ற விவாதங்களை அவர்கள் மேலும் கோரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவற்றை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம் என்றார் மோடி.

முழு நாடும் அவர்களின் நடத்தையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் ஏன் அவர்களைத் தடுக்க வேண்டும்? அவர் (ராகுல்) எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார். அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார். உச்ச நீதிமன்றம் கூட அவரைக் கண்டித்துள்ளது. அவர்களின் குழந்தைத்தனத்தை முழு நாடும் பார்த்துவிட்டது என்றும் அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *