சிதம்பரம், ஜூலை 1
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. விழாவின் 9ம் நாளான இன்று தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிற்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தது.
தேருக்கு முன்னால் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். சிவனடியார்கள் சிவவாத்தியங்களை முழங்கி நடனமாடி சென்றனர்.
இரவு நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் செல்கின்றனர். அங்கு ஏக கால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாளை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடணமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். நாளை மறுதினம் பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடைபெறுகிறது. 4–ம் தேதி தெப்போற்சவத்துடம் விழா முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச்செயலர் சிஎஸ்எஸ் வெங்கடேச தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
#trending news #trending news tamil #makkalkural #மக்கள்குரல் #சென்னை
![]()





