அமராவதி, டிச. 12:
ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் தனியார் பேருந்து ஒன்றில் பத்ராசலம் பகுதியில் உள்ள ராமர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அங்கு தரிசனம் முடிந்த பிறகு அன்னாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் நீண்ட நேரமாக போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் பெயர் விபரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
மேலும் காயமடைந்த 22 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காயமடைந்த சிகிச்சை பெற்று வருபவர்களை அல்லூரி சீதாராம ராஜு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்ட அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்தார்.
ஜனாதிபதி இரங்கல்
இந்த விபத்தில் உயரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி முர்மு தனது எக்ஸ் தளபதிவில், “ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் நடந்த ஒரு துயரமான பேருந்து விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டதை அறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் இரங்கல்:
நிவாரண நிதி அறிவிப்பு
ஆந்திராவில் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனையளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முதல்வர் இரங்கல்
விபத்து குறித்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், சித்தூர் அருகே யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. விபத்து குறித்து அதிகாரிகளிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்த விவரங்களையும் அறிந்து கொண்டேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்யும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
![]()





