செய்திகள்

ஆந்திராவில் நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Makkal Kural Official

விசாகப்பட்டினம், நவ. 18–

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இன்று காலை 6.30 மணியளவில் அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு அமித் பர்தார் கூறும்போது, பாதுகாப்பு படையினருடனான மோதலில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. துப்பாக்கி சூட்டின்போது போலீசார் யாரும் பாதிக்கப்படவில்லை. கூடுதல் படைகளை நாங்கள் களமிறக்கி இருக்கிறோம் என கூறினார்.

கடந்த 6 மாதங்களில் நடந்த 2-வது பெரிய என்கவுன்ட்டர் சம்பவம் இதுவாகும். இந்த ஆண்டின் மே 7-ந்தேதி ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் உள்ள ராமவரம் வன பகுதியில் நடந்த போலீசாருடனான மோதலில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.முன்னதாக வரும் 2026ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து மாவோயிஸ்டுகளும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *