ஐதராபாத், டிச. 29:
ஆந்திராவில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து எர்ணாகுளத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ரெயில் ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 1.11 மணியளவில் ரெயிலின் பி1, எம்1 ஆகிய இரு ஏ.சி. பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் நின்றது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், ரெயிலுக்குள் சிக்கி இருந்த பயணிகளையும் மீட்டனர். இந்த விபத்தில் ஒரு பயணி உயிரிழந்தார். அவர் பெயர் சந்திரசேகர் சுந்தரம் என தெரிய வந்துள்ளது.
சில பயணிகள் தீ விபத்தில் காயமடைந்ததனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ரெயில் தீப்பிடித்தபோது பாதிக்கப்பட்ட ஒரு பெட்டியில் 82 பயணிகளும், மற்றொரு பெட்டியில் 76 பயணிகளும் இருந்தனர். பி1 பெட்டியில் இருந்து ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. சேதமடைந்த இரண்டு பெட்டிகளும் எர்ணாகுளம் நோக்கிச் சென்ற ரெயிலில் இருந்து பிரிக்கப்பட்டன. சேதமடைந்த பெட்டிகளில் இருந்த பயணிகளும் அவர்களின் இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றார். இதனிடையே தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய இரண்டு தடயவியல் குழுக்கள் பணியாற்றி வருவதாக காவல் துறை அதிகாரி கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
![]()





