புதுடெல்லி, ஜூலை.11-
பீகாரில் தலைமை தேர்தல் கமிஷன் நடத்தி வரும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், இந்த சரிபார்ப்பு பணியின்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளையும் உரிய ஆவணமாக கருத்தில் கொள்ளும்படி தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்தது.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. கடைசியாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த 3 கோடி பேர் தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்காக பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம், சிறுபான்மையினர், பட்டியல் இனத்தினர் ஆகியோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, அவர்களது வாக்குரிமையை பறிக்க முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
எனவே, திருத்தப்பணி தொடர்பாக கடந்த மாதம் 24-ந் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் 10-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் ஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) எம்.பி. சுப்ரியா சுலே, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் சுதன்சு துலியா, ஜாய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், ‘‘குடியுரிமையை நிரூபிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை கூட பரிசீலிக்க மறுக்கிறார்கள்’’ என்று குற்றம் சாட்டினார்.
அதற்கு தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி, ‘‘ஆதார் அட்டை, குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல’’ என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘ஆதார் அட்டையை ஏன் ஏற்பதில்லை? ஒருவரின் குடியுரிமைக்கும், தேர்தல் கமிஷனுக்கும் சம்பந்தம் இல்லை. அது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது’’ என்று கூறினர்.
அதற்கு ராகேஷ் திவிவேதி, ‘‘அரசியல் சாசனத்தின் 326-வது பிரிவின்படி, ஒவ்வொரு வாக்காளரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்’’ என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள் கூறியதாவது:-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் குடியுரிமையை பரிசோதிக்க வேண்டும் என்றால், நீங்கள் முன்பே தொடங்கி இருக்க வேண்டும். இது மிகவும் தாமதம். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றையும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எங்கள் கருத்து. 10 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்பட எந்த மனுதாரருமே வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு இடைக்கால தடை கேட்கவில்லை. நாங்களும் இந்த பணியை நிறுத்துவது பற்றி சிந்திக்கவில்லை.
தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்க முடியாது. இது, அரசியல் சாசனப்படி கட்டாயம் செய்ய வேண்டிய பணி. அதே சமயத்தில், செய்யக்கூடாததை செய்ய விட மாட்டோம். நாங்கள் தேர்தல் கமிஷனின் நேர்மையையும், உண்மைத்தன்மையையும் சந்தேகப்பட வில்லை. ஆனால், இந்த பணி நடக்கும் நேரம்தான் சந்தேகத்தை எழுப்புகிறது.
மனுதாரர்களின் 3 கேள்விகளுக்கு தேர்தல் கமிஷன் பதில் அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி செய்வ தற்கான தேர்தல் கமிஷனின் அதிகாரம், அதற்கான நேரம் உள்ளிட்ட சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அதற்கு மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி கூறிய தாவது:– 60 சதவீத வாக்காளர்கள் ஆவணத்தை அளித்து, தங்கள் விவரங்களை சரிபார்த்து விட்டனர். காலம் செல்ல செல்ல, வாக்காளர்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவது அவசியம். அதற்கு சிறப்பு திருத்தப்பணிதான் ஒரே வழி. அதை செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை என்றால், வேறு யார் செய்வது? எந்த வாக்காளரின் பெயரும் அவர்களது கருத்தை கேட்காமல் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று உறுதி அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து, மனுக்களுக்கு 21-ந் தேதிக்குள் பதில் அளிக்கு மாறு தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேர்தல் கமிஷனின் பதில் மனுவுக்கு மனுதாரர்கள், 28-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
![]()




