சென்னை, டிச. 31:
2026 புத்தாண்டை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடும் நோக்கில், சென்னை மாநகர காவல்துறை பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டு முன்னிட்டு சென்னை முழுவதும் 19,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு துணையாக 1,500 ஊர்காவல் படையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிசம்பர் 31 மாலை 6 மணி முதல் பாதுகாப்பு பணிகள் தொடங்கும்.
மயிலாப்பூர், தியாகராயநகர், அடையாறு, அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட 12 போலீஸ் மாவட்டங்களில் 425 இடங்களில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்படும். ‘பைக் ரேஸ்’ மற்றும் சாகச ஓட்டங்களைத் தடுக்க 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் டிசம்பர் 31 மாலை முதல் ஜனவரி 1 வரை பொதுமக்கள் கடலில் குளிக்கவும், இறங்கி விளையாடவும் அனுமதி இல்லை. இப்பகுதிகளில் குதிரைப்படை, ட்ரோன் கேமராக்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மது அருந்தும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்கத் தடை, அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
விபத்துகள் இன்றி, உயிர்ப்பலி இல்லாத புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
![]()





