செய்திகள் முழு தகவல்

‘‘ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் நிரந்தர வீடு; வீட்டிற்கு ஒரு பைக்’’: விஜய் வாக்குறுதி

Makkal Kural Official

சென்னை, நவ. 23:

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…’’ அனைவருக்கும் நிரந்தர வீடு, வீட்டிற்கு ஒரு பைக் வழங்கப்படும்’’ என்று காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் விஜய் வாக்குறுதி அளித்தார்.

தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இதையொட்டி தனது பிரசார பயணத்தையும் அவர் தொடங்கினார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கடும் வேதனைக்குள்ளான விஜய் தனது பிரச்சார பயணத்தை தள்ளி வைத்திருந்தார். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் ஒரு மாதம் கழித்து நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

இதன் பின்னர் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தும் கூட்டணி பற்றி முடிவெடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கியும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் விஜய் மக்களை நேரில் சென்று சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறாமலேயே இருந்து வந்தன. பொது இடத்தில் விஜய் மக்களை சந்தித்து பேசினால் அதிகம் பேர் திரண்டு வருகிறார்கள். இதற்கு உரிய அனுமதி பெறுவதிலும் சிக்கல்கள் உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு விஜய் உள் அரங்கில் மக்களை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டனர். இந்த நிலையில் 55 நாட்களுக்கு பிறகு காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாநில நிர்வாகிகள் செய்திருந்தனர்.

2 ஆயிரம் பேர்

மட்டுமே அனுமதி

காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் 2 ஆயிரம் பேருக்கு ‘கியூஆர்’ கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க நுழைவுச் சீட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும், நுழைவுச் சீட்டு இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் விஜய் பேசியதாவது:–

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பங்கேற்கும் பிரச்சார நிகழ்ச்சி என்பதால், இந்த கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலயது. முன்னதாக த.வெ.க. தொண்டர் பாதுகாப்பு படையினருக்கு முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள் உள்ளிட்டோரை வைத்து பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. விஜய்யை பார்ப்பதற்காக சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க தகரத்தால் ஆன தடுப்பு வேலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 1 கிலோ மீட்டர் தூரம் யாரும் வராத வகையில் தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கைக் குழந்தையுடன் வந்த

பெண்ணை திருப்பி அனுப்பினர்

இன்று காலை முதல் நிகழ்ச்சி வந்தவர்களில் நுழைவுச் சீட்டு வைத்துள்ளவர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பதற்காக தனியார் கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்புக்காக தன்னார்வலர்கள் நின்று கொண்டிருந்தனர். நுழைவு வாயிலில் காலை முதலே தொண்டர்கள் திரளாக நின்று கொண்டிருந்தனர். மேலும் சாலையின் இரு பக்கமும் விஜய்யை காண மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.

வந்தவர்களில் ‘கியூஆர்’ குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியை தொண்டரின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு கருதி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதாலும், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் த.வெ.க.வினர் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.

காஞ்சீபுரத்தில் நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார். அவர் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தார்.

“நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார் என்ற எம்ஜிஆர் பாட்டு உங்கள் அனைவருக்கும் தெரியும். காஞ்சித் தலைவர் அண்ணா பிறந்தது இந்த காஞ்சிபுரம் மாவட்டம். அண்ணா தொடங்கிய கட்சியை இன்று என்னவெல்லாம் செய்கிறார்கள். அவர்கள் நம்மிடம் வன்மத்தோடு இருக்கலாம். அவர்கள் பொய் சொல்லி நம்மை நம்ப வைத்து வாக்கு பெற்றார்கள். இப்போது ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல நாடகம் ஆடுகிறார்கள். அவர்களை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? அவர்களைக் கேள்வி கேட்காமல் இருக்கப்போவது இல்லை.

திமுகவின் கொள்கையே

கொள்ளை தானே..

காஞ்சிபுரத்திற்கும் எனக்கும் தன்னிச்சையாகவே ஒரு இணைப்பு இருக்கிறது. நான் முதல் களப்பயணம் தொடங்கியது பரந்தூர்தான். ஒரு பெரிய மன வேதனைக்குப் பிறகு நான் வந்திருப்பது இந்த காஞ்சிபுரம் மாவட்டம்தான். மக்களுக்கு சட்டபூர்வமாக அதிகாரபூர்வமாக ஒரே மாதிரியாக ஒரே எண்ணத்துடன் செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ‘மக்களிடம் செல்’ என்ற அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றி மக்களுடன் பயணிக்கிறோம். ஆனால், அவர்கள் அண்ணாவை மறந்துவிட்டார்கள். நமக்கு கொள்கையில்லை என்று திமுக தலைவர் சொல்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…, சிஏஏ எதிர்ப்பு, வக்ப் திருத்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றது, சமத்துவம், சமூக நீதி என்று கூறிய நமக்கு கொள்கையில்லையா? திமுகவின் கொள்கையே கொள்ளைதானே. இன்னும் நாங்கள் அடிக்கவே தயாராகவே இல்லை. அதற்குள்ளாக அலறினால் நாங்கள் என்ன செய்வது?

நெசவாளர்கள் நிலை

மோசமாக உள்ளது

விவசாயிகளைக் கண்டுகொள்ளாமல் அரசு கைவிட்டுவிட்டது. காஞ்சிபுரத்தில் பட்டு தயாரித்துக்கொடுக்கும் நெசவாளர்கள் நிலை மோசமாக இருக்கிறது. நெசவாளர்களுக்கு ஒருநாள் கூலி 500 ரூபாய்தான். இதனை அதிகரிக்க வலியுறுத்தி பல போராட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை அந்த ஊதியத்துக்கும் வஞ்சகம் செய்துவிட்டது. காஞ்சிபுரத்தின் பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியது. இதனை புதுப்பிக்கக்கூட முடியவில்லை. பாலாற்றில் ரூ. 4,730 கோடி மதிப்பிலான மணலை கொள்ளையடித்துள்ளனர்.

அரசாங்கத்தால் நல்ல இடத்தை தேர்வு செய்து பேருந்து நிலையம் கட்ட முடியாதா? மக்களை பற்றி யோசிப்பதற்கே அவர்களுக்கு நேரம் இல்லை. இதுதான் அவர்களின் பிரச்னை. வாலாஜாபாத் அருகே அவலூர் ஏரி உள்ளது. அது பாலாற்றை விட உயரமாக உள்ளது. இதனால் ஆற்று நீர் ஏரிக்குச் செல்ல முடியாத நிலை. இதனை சரி செய்தால் பல ஏக்கர் விவசாயம் செழிக்கும். இதனை சரி செய்ய எத்தனை ஆண்டுகள் விவசாயிகள் மனு கொடுக்க வேண்டும்?

பரந்தூர் விமான நிலைய பிரச்னையில் விவசாயிகள் பக்கம்தான் தவெக நிற்கும். காரணங்கள் கூறி திமுக அரசு தப்பிக்க முடியாது. மக்கள் பிரச்னைகளை பேசுவதால் நம் மீது ஆத்திரம் வரத்தான் செய்யும். சட்டப்பேரவை தொடங்கி சாதாரண நிகழ்ச்சி வரை தவெக மீதான அவதூறுதான். இதற்கு நிச்சயம் பதில் அளிப்போம்.

வாக்குறுதி

உங்கள் அரசவைப் புலவர்கள் யாராவது இருந்தால் கைக்குட்டை எடுத்து கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள். சட்டசபையில் தொடங்கி எல்லா நிகழ்ச்சிகளிலும் த.வெ.க. மேல்தான் அவதூறு பரப்புகிறார்கள். நாம் ஆட்சிக்கு வந்தா… அது என்ன வந்தா… வருவோம்… மக்கள் நம்மை கண்டிப்பாக வரவைப்பார்கள்.

மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் அனைவருக்கும் நிரந்தர வீடு இருக்க வழிவகை செய்யப்படும். வீட்டிற்கு ஒரு மோட்டார் வாகனம் இருக்கும் வகையில் வழிவகை செய்யப்படும். வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தமிழக பாட திட்டத்தை மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அச்சமின்றி செல்ல வேண்டும். வீட்டில் ஒருவர் பட்டப்படிப்பை முடித்திருக்க வழிவகை செய்யப்படும். சட்டம் ஒழுங்கை மிக சிறப்பாக வைத்து அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தொண்டர்கள் தற்குறி அல்ல;

ஆச்சரியக்குறி

அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர் தான் நம்மை தற்குறி என அழைக்க வேண்டாம் எனப் பேசினார். திமுக எம்எல்ஏ எழிலனின் ஆதரவு குரல் போன்ற குரல் அனைத்து வீடுகளிலும் எதிரொலிக்கும். கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்பதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. நடிகர் கட்சி… நடிகர் கட்சி என்று சொனன் ஒருத்தர் எம்.ஜி.ஆர். கூடவே போய் சேர்ந்துவிட்டார்.

ஏண்டா விஜய்யைத் தொட்டோம், ஏண்டா விஜய் கூட இருக்கும் மக்களைத் தொட்டோம் என ஃபீல் பண்ண போறாங்க. எங்களுக்கு ஓட்டுபோட இருக்கும் மக்களை தற்குறி என்கிறீர்களே… அவர்களிடம் தானே நீங்கள் ஓட்டு கேட்டீர்கள். தற்குறி என நீங்கள் கூறுபவர்கள் தான் உங்களின் தலையெழுத்தை மாற்றி எழுதப் போகிறார்கள். த.வெ.க. தொண்டர்கள் அனைவரும் தற்குறி அல்ல தமிழ்நாடு அரசியலின் ஆச்சரியக்குறி. வெற்றி நிச்சயம்’’.

இவ்வாறு அவர் பேசினார்.

–––––––––––

பாக்ஸ்

–––––––––––

தி.மு.க.வை கிண்டலடித்த விஜய்

–––––––––––––––

தி.மு.க அரசின் பிரச்சனை என்னவென்றால் மக்களைப் பற்றி சிந்திப்பதற்கே நேரமில்லை. குறி வைத்தால் தவறாது, தவறும் என்றால் குறியே வைக்கமாட்டேன் எம்.ஜி.ஆர். வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.

இந்த விஜய் சும்மா எதையும் சொல்ல மாட்டான்… ஒன்னு சொன்னா அதை செய்யாம விடமாட்டான்…

பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாதே பாப்பா.

நீ நல்லவர் போல நடிப்பதை பார்த்து நாடே… என்று கூறி விட்டு சிரித்தார்.

பாப்பானு ஆசையா, பாசமா, சாஃப்ட்டா தான் சொன்னோம். ஆனா அதையே விமர்சனமா எடுத்துக்கிடா எப்படி.

நாங்க இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவே இல்லையே. அதுக்குள்ள அலறுனா எப்படி? வெளியில் செல்ல அனுமதி கிடைத்தவுடன் நிச்சயம் வெளியில் வருவோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *