சென்னை, ஜன.22-
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியுதவியுடன் மாநில வள மையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். அப்போது பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் உடன் இருந்தார்.
புதிதாக திறக்கப்பட்ட இந்த வள மையத்தில், வளர்ந்துவரும் கல்வி தொழில்நுட்பவியலின் நவீன யுக்திகளை பயன்படுத்தி கற்றல்-கற்பித்தலை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும், பணியிடை பயிற்சி களின் போது ஆசிரியர்கள் கற்பதற்கு வாய்ப்பளிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது
இதுமட்டுமல்லாமல், மொழிகள் ஆய்வகம் மற்றும் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு தனித்தனி அரங்குகள், மாணவர்கள் தாங்களே சோதனைகளை செய்து பாடப்பொருள் சார் கருத்துகளை கற்றுணர ‘கற்க கசடற’ என்ற பெயரில் தனியே அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அறிவியல், கலாசார, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், தேசிய, சர்வதேச அளவில் கொண்டாடப்படும் முக்கிய நாட்கள், வானியல் நிகழ்வுகள் ஆகியவை தொடர்பான இணையவழி கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், கலந்துரையாடல் நிகழ்வுகள், துறைசார் வல்லுனர்களின் சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கின்றன.
![]()





