கோலம்பூர், அக். 23–
மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வரும் 26–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை 3 நாட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், பிரதமர் மோடியும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளிப் பண்டிகை காரணமாக பிரதமர் மோடியால் ஆசியான் மாநாட்டில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை, இருப்பினும் காணொலி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார் என்று மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மேலும், பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கவுள்ள நிலையில், ஆசியான் மாநாட்டில் நேரில் பங்கேற்பதை தவிர்த்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் நிறைவடையாததால், இந்திய பொருள்களின் இறக்குமதிக்கு 25 சதவிகிதம் வரி விதித்துள்ள டிரம்ப், எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதால் கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதித்தார். இதனிடையே, இந்தியா – அமெரிக்க அதிகாரிகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக பிரதமர் மோடி தனக்கு உறுதி அளித்திருப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப்புடன் மோடி பேசியதை இந்திய அரசு உறுதிப்படுத்தாத நிலையில் குழப்பம் நீடிக்கிறது.
இந்த நிலையில், ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றால் டிரம்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் மலேசிய பயணத்தை மோடி தவிர்த்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்திய வழக்கத்தின்படி, ஒரு நாட்டுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகுதான், தலைவர்கள் நேரில் சந்தித்துக் கொள்வார்கள். 2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, 2022 தவிர அனைத்து ஆசியான் உச்சி மாநாட்டிலும் பங்கேற்றுள்ளார். இந்த முறை ஆசியான் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, எகிப்தில் நடைபெற்ற இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்விலும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த மாநாடு டிரம்ப் தலைமையில் நடைபெற்றதால், மோடி நேரில் செல்வதை தவிர்த்து, வெளியுறவுத்துறை இணை அமைச்சரை அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் விமர்சனம்
இதனை விமர்சித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:–
பிரதமர் மோடி கோலாம்பூரில் நடக்கும் உச்சி மாநாட்டுக்குச் செல்வாரா? இல்லையா? என்ற ஊகங்கள் பல நாட்களாகவே வெளியாகி வந்தன. தற்போது அவர் செல்லமாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் உலகத் தலைவர்களை கட்டியணைத்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பையும், தன்னை விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் வாய்ப்பையும் அவர் இழக்க நேரிடும்.
பிரதமர் கோலாம்பூர் செல்லாததற்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை. அங்கு வருகைதரும் அதிபர் டிரம்ப்பிடம் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. சமூக வலைதளங்களில் அதிபர் டிரம்ப்பை புகழ்ந்து மோடி பதிவிடுவது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆபரேஷன் சிந்தூரை தடுத்ததாக 53 முறையும், ரஷிய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தப் போவதாக மோடி உறுதி அளித்திருப்பதாக 5 முறை கூறியவருடன் நேரில் நெருக்கமாக சந்திப்பது வேறு விஷயம். இது மோடிக்கு மிகவும் ஆபத்தானது என கூறியுள்ளார்.
![]()





