சென்னை, ஜன.2-
ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 13 ஆயிரத்து 200 பேர் வந்தனர் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்தனர். இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
நுழைவாயில் பகுதியில் பார்வையாளர்கள் கொண்டு வரும் பைகளை பூங்கா ஊழியர்கள் சோதனை செய்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்த பிறகே பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பூங்காவுக்குள் சென்ற பொதுமக்கள் அங்குள்ள வெள்ளைப்புலி, வங்கப்புலி, நீர்யானை, காண்டாமிருகம், சிறுத்தைகள், சிங்கங்கள், உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்து ரசித்தனர்.
13 ஆயிரத்து 200 பேர் வருகை
பூங்காவில் உள்ள ஆதித்யா என்ற மனித குரங்கு குட்டி தனது தாய், தந்தையிடம் செய்யும் சேட்டைகளையும், அதனுடைய இருப்பிடத்தில் உள்ள ஊஞ்சலில் ஒய்யாரமாக ஆடியபடி செய்த சேட்டைகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீண்டநேரம் ஒரே இடத்தில் நின்றபடி பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். யானைகள் ஷவரில் குளித்து மகிழும் காட்சிகளையும் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்து பார்த்தனர். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 13 ஆயிரத்து 200 பேர் வருகை தந்ததாக பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
![]()





