செய்திகள்

அ.தி.மு.க. வை ஒருங்கிணைக்க எடப்பாடிக்கு 10 நாள் கெடு

Makkal Kural Official

கோபி, செப்.5–

அண்ணா தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என செங்கோட்டையன் கூறியிருந்தார் அல்லவா? அதன்படி, அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக மேஜையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வணங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–

அண்ணா தி.மு.க.வை 1972-ல் எம்ஜிஆர் தொடங்கினார். தொடர்ந்து கொல்லம்பாளையத்தில் கிளைச் செயலாராக எனது பணியைத் தொடங்கினேன். 1975-ல் கோவையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதில் நான் பொருளாளராக எம்ஜிஆரால் நியமிக்கப்பட்டேன். எனது செயல்பாடுகளுக்காக என்னை அவர் பலமுறை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

எம்ஜிஆர் என்னை சத்தியமங்கலத்தில் போட்டியிடச் சொன்னார். நான் தயங்கியபோது, என் பெயரை சொன்னாலே வெற்றி கிடைக்கும் என்றார். அத்தகைய செல்வாக்கு மிக்க தலைவர் அவர். மக்கள் மனதில் நிறைந்தவர். இந்தியாவின் சிறந்த முதல்வர் என்ற பெருமை பெற்றுத் தந்தார்.

அவருக்குப் பின்னர் ஆளுமைமிக்க, மக்கள் செல்வாக்குள்ள ஜெயலலிதாவே கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஜெயலலிதாவும் சிறந்த முதல்வராக இருந்தார். அவருடைய ஆட்சி 5 முறை அமைந்தது. ஆன்மிகவாதி, திராவிடவாதிகளால் போற்றப்பட்டார்.

அவரது மறைவுக்குப் பின்னர் இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வந்தன. அன்றைக்கு எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தோம். மீண்டும் முதல்வராக இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழியப்பட்டார்.

தடுமாற்றமே இல்லாமல் பணியாற்றினேன்…

இந்த இயக்கத்தில் பல்வேறு தடுமாற்றங்கள் வந்தபோதும் நான் தடுமாற்றமே இல்லாமல் திறம்பட பணியாற்றியுள்ளேன். அதற்காக ஜெயலலிதா என்னைப் பலமுறை பாராட்டியுள்ளார். நெடும் பயணத்தை மேற்கொள்ளும் போது பொறுப்புகள் கிடைக்கும், சோதனைகளும் வரும். தமிழகம் எப்படி இருக்க வேண்டும். தமிழக மக்கள் எப்படி செழிப்போடு வாழ வேண்டும் என்பதற்காக நான் தியாகம் செய்தேன். எனக்கு கட்சியில் இரண்டு வாய்ப்புகள் கிடைத்தபோதும், இயக்கத்துக்காக தியாகம் செய்தேன்.

2016-க்குப் பிறகு தேர்தல் களத்தை அண்ணா தி.மு.க. சந்தித்திருக்கிறது. 2019, 2021 தேர்தல், 2024 தேர்தல், பின்னர் உள்ளாட்சித் தேர்தல் சந்தித்தபோது களத்தில் பல பிரச்சினைகள் நடந்தது.

அண்ணா தி.மு.க. தேர்தல் களத்தில் வெற்றிகரமாக இருக்க முன்னாள் முதல்வர் கொண்டிருந்த மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ணம் வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். வெளியே சென்றவர்கள் எந்தப் பொறுப்பும் தேவையில்லை என்று சொல்லும்போது அவர்களை அரவணைக்க வேண்டும். இதுவே எனது கோரிக்கை. பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அண்ணா தி.மு.க. வெற்றி பெறும்.

இல்லாவிட்டால் அண்ணா தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்துகளைக் கொண்டவர்களை இணைத்து கட்சியை ஒன்றுபடுத்த நான் பாடுபடுவேன். ஒன்றுபடாமல் நாளை அண்ணா தி.மு.க. ஆட்சி மலரும் என்று எவராலும் கூற முடியாது.” என்று கூறினார்.

வேலுமணி, தங்கமணியுடன்

எடப்பாடியை சந்தித்தேன்

அண்ணா தி.மு.க.வை ஒன்றிணைக்க எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் 6 பேருடன் சென்று எடப்பாடியை சந்தித்தேன். அவர் எங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. டெல்லி சென்று, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமும் இது குறித்து கூறினோம். ஆனால் எடப்பாடி யார் கருத்தையும் ஏற்க வில்லை. பல சந்தர்ப்பங்களில் அவரிடம் பேசுவதற்கு முயன்றும் அவர் இது சம்பந்தமாக பேசவில்லை. 2024ல் பா.ஜ.க. உடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் நாம் 30 இடங்களை வென்றிருப்போம்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தனக்கு எதிராக ஊழல் புகார் அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் மற்றும் சிலரை அவர் வீட்டுக்கே சென்று கழகத்தில் ஒருங்கிணைத்தார்.அது தமிழக மக்கள், கட்சியின் நலனுக்காக. அதே போன்று அவர் மறைவுக்குப் பின் வந்த ஜெயலலிதாவும் கழகத்தை விட்டு பிரிந்தவர்கள் மற்றும் தன்னை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் கூட கட்சியில் ஒருங்கிணைத்தார். அவர்கள் இருவரும் மாபெரும் தலைவர்கள், தமிழகம் அவர்களால் ஏற்றம் பெற்றது. இப்பொழுது கூட எனக்கு தமிழகம் நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் வளமாக வாழ வேண்டும். இந்த கழகத்தை நம்பி உள்ள கோடான கோடி தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.

எடப்பாடி மனநிலை

எனக்குத் தெரியாது…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் கருத்து சொல்லவில்லை. ஆனால் அவரே 2009-ல் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அது உங்களுக்கு தெரியுமா? அடுத்தகட்டமாக நெருங்கிய நண்பர்களோடு ஆலோசிக்க உள்ளேன். எடப்பாடி மனநிலை என்ன எனக்கு தெரியாது. என் மனநிலை, அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் விரைந்து இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே எடப்பாடியின் சுற்றுப்பயணத்தில் பங்குகொள்ளவில்லை.

அண்ணா தி.மு.க. வில் யார், யாரை இணைக்க வேண்டும் என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்றால்தான். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன். இயக்கத்திற்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன்; அதற்காக தான் எனது பணிகளை தொடங்கியுள்ளேன்.

2010, 2016-ல் கூட்டணியை வலிமையாக்க ராஜதந்திரத்தோடு செயல்பாட்டார் ஜெயலலிதா; அதேபோல இன்றும், அமைதியாக இருப்பவர்களை சகோதரப்பாசத்தோடு இணைத்து செயல்படுத்தினால்தான் வெற்றி என்ற இலக்கை அடைய முடியும். இதைத்தான் மக்களும் தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் இப்பொழுது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்களது கோரிக்கையை இபிஎஸ் நிராகரித்து விட்டால் உங்கள் நடவடிக்கை என்னவாக இருக்கும்? நீங்கள் அடுத்த பொதுச்செயலாளராக முயற்சி செய்வீர்களா? என்று ஒரு நிருபர் கேட்டார்.

என்னை பொறுத்தவரை இந்த இயக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த இயக்கம் உயிரோட்டம் உள்ள இயக்கமாக, ஜெயலலிதா 100 ஆண்டுகள் வாழும் குறிப்பிட்டது போல் அதற்காக எனது பணிகளை இன்று தொடங்கி இருக்கிறேன் என்றார்.

என்னை பொறுத்தவரைக்கும் இரண்டு விஷயங்களை சொன்னேன். விரைந்து இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசை.

அப்படி இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், இந்த மனநிலையில் இருப்பவர்களை எல்லோரும் சேர்ந்து ஒன்றிணைக்க முயற்சி செய்வோம். இது தான் எங்களுடைய நோக்கம் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

எடப்பாடி தலைமைக்கு

பாதிப்பு…?

பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறியுள்ளார். எதற்காக அவர் மறுக்கிறார். அவரது தலைமைக்கு பாதிப்பு வரும் என்று நினைக்கிறாரா? என்று இன்னொரு கேள்விக்கு,

என்னை பொறுத்தவரைக்கும் அவரது மனநிலை பற்றி எனக்கு தெரியாது. என்னுடைய மனநிலை தொண்டர்களின் மனநிலை. பொதுமக்கள் இந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் மனநிலையை தான் நான் இங்கு வெளிப்படுத்தினேன்’ என்று கூறினார்.

சஸ்பென்ஸ்

சசிகலா உட்பட ஒத்தக்கருத்துடையவர்களை சந்தித்து இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அது சஸ்பென்ஸ் என செங்கோட்டையன் பதில் அளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *