செய்திகள்

அ.தி.மு.க. முதல்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதி மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: எடப்பாடி அதிரடி அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, ஜன.17–

அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்தார்.

ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பஸ் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்; 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என எடப்பாடி முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைமை கழகத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி பெரிய ரோஜா மாலை அணிவித்து வணங்கினார். பின்னார் அண்ணா தி.மு.க. கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

பின்னர் தலைமை கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 109 கிலோ ராட்சத கேக் வெட்டி அனைவருக்கும் தன் கைப்பட வழங்கினார்.

5 தேர்தல் வாக்குறுதிகள்

பின்னர் தலைமை கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல் கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அவர் அதிரடியாக அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் 17–வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அண்ணா தி.மு.க.வின் சார்பில் அளிக்கப்படும் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் :

மகளிருக்கு ரூ.2000

1. மகளிர் நலன் : (குல விளக்குத் திட்டம்) சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் : நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

அனைவருக்கும் வீடு

3. அனைவருக்கும் வீடு : (அம்மா இல்லம் திட்டம்) ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

பெண்களுக்கு ஸ்கூட்டர்

4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் : 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் : மகளிருக்கு ரூ. 25,000 – மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஏற்கனவே அரசுக்கு அதிக அளவில் கடன் சுமை உள்ளது. இந்த நிலையில் இந்த வாக்குறுதிகள் சாத்தியப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர்.

எங்களிடம் நிர்வாகத்

திறமை உள்ளது

அவர்களுக்கு (தி.மு.க.) நிர்வாக திறமை இல்லை. எங்களுக்கு நிர்வாகத் திறமை இருக்கிறது. எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கொரோனா காலத்திலேயே அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு இருந்தது. அப்போதே நாங்கள் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தோம். நிதி நிலைமையை உருவாக்கி தந்தோம். தி.மு.க. ஆட்சியில் நிதி மேலாண்மை குழு அமைத்தார்கள். ஆனாலும் கடன் குறையவில்லை. தி.மு.க. ஆட்சியின் முடிவில் கடன் சுமை 5.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கடன் சுமை அதிகமாக உள்ள நிலையில் ஆண்களுக்கும் அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணம் சாத்தியப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு நிர்வாகத் திறமை இருந்தால் எல்லாம் சரி செய்ய முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அண்ணா தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மண்டல வாரியாக மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு மனுக்களை பெற்று அறிக்கை தயார் செய்து அளிப்பார்கள். அதில் மக்கள் நினைப்பது தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *