சென்னை, ஜன. 21–
அண்ணா தி.மு.க. தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்தது. பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை டிடிவி தினகரன் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்தார்.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் மேலும் சில கட்சிகளை இணைக்க முயற்சி நடந்து வந்தது. அந்த வகையில் பா.ம.க.வின் அன்புமணி தரப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.
தற்போது வரை அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தேமுதிக, அமமுகவை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அ.தி.மு.க. – பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற நல்லாட்சிக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கிறோம். என்றைக்கும் விட்டுக்கொடுத்துப் போனவர்கள் கெட்டுப் போவதில்லை. என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டை. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என ஏற்கெனவே நான் பொதுக்குழுவில் சொன்னேன். பழைய விஷயங்களை நினைத்து, கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு முடிவெடுக்கிறோம். நாங்கள் விட்டுக்கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு மீண்டும் தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி வருவதற்கு, மக்களாட்சி வருவதற்கு, நல்லாட்சி வருவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரன், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்தார். அப்போது அவருக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.
அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
பியூஷ் கோயல் உள்ளிட்டோருடன் டிடிவி தினகரன் புகைப்படம் எடுத்துக்கொண்டு கையை உயர்த்தி கூட்டணியை உறுதி செய்தார். தொடர்ந்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடந்த தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அமமுக, கூட்டணியில் அண்ணா தி.மு.க. இணைந்ததால் விலகியது. கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலகினார். தற்போது சட்டமன்ற தேர்தலையொட்டி மீண்டும் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ளார்
![]()





