செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தி.மு.க. அரசு கடன் வாங்கியது குறித்து விசாரணைக் கமிஷன்

Makkal Kural Official

கோவையில் நடைப்பயிற்சியின்போது எடப்பாடி பேட்டி

கோவை, ஜூலை 8–

“2024–25ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் தி.மு.க. அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கோவை ரேஸ்கோர்ஸில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் பொதுமக்களை சந்தித்துப் பேசியபோது இதனை தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பிலான சுற்றுப் பயணத்தை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். மேட்டுப்பாளையம் நகரப் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமி தங்கினார். அதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் ரேஸ்கோர்ஸ் நடைபாதைக்கு எடப்பாடி வந்தார். ஷூ மற்றும் டிராக் பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து கொண்டு அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏக்கள் அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோரும் வந்தனர்.

நடைப்பயிற்சியில் ஈடுபட்ட எடப்பாடியை பார்த்து உற்சாகமடைந்த பொதுமக்கள் அவரை சந்தித்து கை குலுக்கி பேசினார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

அண்ணா தி.மு.க.வுக்கு கோவை ராசியான மாவட்டம். அண்ணா தி.மு.க. ஆட்சியில் நிறைய திட்டங்களை நிறைவேற்றினோம். 2026 தேர்தலில் அண்ணா தி.மு.க.வுக்கு வெற்றி நிச்சயம். சுற்றுப்பயணத்தில் மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்து பணிகளின் போது, நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை. சிறுவாணி அணையும் புனரமைக்கப்படாமல் உள்ளது. தேர்தல் அறிக்கையின்படி 4 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக திமுக அரசு உறுதியளித்தது. ஆனால், 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு தான் அரசு வேலை வழங்கியுள்ளனர். தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை.

2024–25ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் தி.மு.க. அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *