செங்கமங்கலாக இருந்தது, வானம்.படுக்கையில் இருந்து எழுந்த மூக்கம்மாள், வீட்டின் கடை மடையில் இருந்த பானையில் தண்ணீரை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். வெற்றிலை போட்டுப் போட்டுக் கரையாய் போன தன் பற்களை எவ்வளவு நாள் பல் தேய்த்தும் அந்தச் சிவப்புக் கறை அவள் பற்களை விட்டு தீர்ந்தபாடில்லை என்ற வருத்தத்தில் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த எரிந்த வறட்டிச் சாம்பலை தன் இடது கையில் கொட்டி, வலது ஆட்காட்டி விரலில் தொட்டு விருட்டு, விருட்டு என்று பல் துலக்கினாள்.
விடிவதற்குத் தயாராக இருந்த வானத்தில் பறந்து சென்று கொண்டிருந்தன, சில பறவைகள். பல் துலக்கிக் கொண்டே படுக்கையில் கிடந்த தன் பேரன் முத்துவை எழுப்பினாள்.
” ஏலேய்…முத்து, சீக்கிரம் எந்திரிடா. பொழுது விடியப் போகுது . இன்னும் எந்திரிக்காம இப்படிப் படுத்துக் கெடந்தா வேல நடக்குமா ? வெரசா போனாத்தான ஏதாவது கெடைக்கும். “
என்று சாக்கில் சுருண்டு படுத்துக் கிடந்த முத்துவை எழுப்பினாள், மூக்கம்மாள். அவளின் சத்தம் முத்துவின் காதில் விழுந்தாலும், அந்த அதிகாலைப் பனி அவன் தூக்கத்தை மேலும் சுருட்டியது.
” படவா.. நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். இன்னும் படுத்துத் தூங்குறியா? எந்திரிடா “
என்று மறுபடியும் குரல் கொடுத்தாள் மூக்கம்மாள்.
” ம்… என்னாத்தா, மனுசன நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்க விட மாட்டியா? “
என்று சலித்துக் கொண்டே எழுந்தான் முத்து.
” இந்தப் பயலுக்கு இதே வேலையா போச்சு? எப்ப பாத்தாலும் இவன எழுப்பிக்கிட்டுத் தான் இருக்கணும்”
என்று சலித்துக் கொண்டே வேலைக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தாள், மூக்கம்மாள்.
எழுந்ததும் தூங்கி வழிந்து நின்று கொண்டிருந்த முத்துவின் மீது, தன் கையிலிருந்த தண்ணீரைச் சல்லென்று அவன் மேல் தெளித்தாள். உலுக்கி விழுந்த முத்து
‘காலையிலயே இந்தக் கெழவி ஏன் இந்த அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்கு ” என்று முத்து கோபமாக நினைத்தாலும் ,தன் பாட்டி அன்பானவள், அவள் எது செய்தாலும் தன் நல்லதுக்குத் தான் செய்வாள் ‘ என்று தன் மனதிற்குள்ளே நினைத்தவன், அந்த வார்த்தையை வெளியில் விடாமல் அப்படியே நிறுத்திக் கொண்டான்.
” பொழுது விடியுறதுக்கு முன்னாடிப் போனா தான ஏதாவது கெடைக்கும், இல்ல காக்கா, குருவி, மனுசங்கன்னு வந்து கூடிருவாங்க” என்றாள் மூக்கம்மாள் .
தூக்கம் கலைத்த முத்து, இரு கைகளிலும் பீழை வடியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, இடுப்பை விட்டுச் சரிந்த டவுசரை மேலே தூக்கி அரைஞாண் கயிற்றோடு இறுக்கிக் கட்டிக் கொண்டான். எரிந்த வறட்டிச் சாம்பலை இடது கையில் கொட்டி வலது கை ஆட்காட்டி விரலில் தொட்டுத் தொட்டு வாயில் வைத்து இடதுபுறம் வலது புறம் என்று இழுத்தான் …
“சீக்கிரம் கிளம்புடா. நேரம் ஆகுதுல்ல, சமஞ்ச கொமரி மாதிரியே சிங்காரிச்சிட்டு இருக்க ” என்று மூக்கம்மாள் விரட்ட, சலித்துக் கொண்ட முத்து, அவசர அவசரமாகக் கிளம்பினான்.
இரண்டு பேருக்கும் வட்டியில் பழைய சோறும் தண்ணீரும் ஊற்றி ஈராங்காயை நறுக்கி வைத்தாள்.
“ஆத்தா குளிச்சிட்டு வந்து சாப்பிட வா ? ” என்று முத்து சொல்ல
” மொதல்ல கஞ்சியக் குடி ,போகும் போது ,ஓடையில தண்ணி வரும். அங்கன குளிச்சிக்கலாம் “என்று ஆத்தா எதிர் குரல் கொடுக்க ” சரி “என்ற முத்து, ஆத்தா ஊத்தி வைத்த பழைய சோற்றைச் சாப்பிட ஆரம்பித்தான்.
” என்னாத்தா இன்னைக்கும் பழைய கஞ்சி தானா? “என்று கேட்க
” உங்க தாத்தா, அப்பன் நமக்கு என்ன சீரகச் சம்பா அரிசியும் கோழிக்கறியும் சாப்பிடுறதுக்கா சொத்து சேத்து வச்சிட்டு போயிருக்கானுக. இந்த நீச்சத்தண்ணி கெடைக்கிறதே நமக்கு பெரிய விசயம் ” என்று தன் நிலைமையைச் சொல்லிக் கொண்டாள் மூக்கம்மாள்.
” சரி கிளம்பு” என்று சொல்லி, பரணியில் கிடந்த கொடியில் செய்த விளக்கமாற்றை எடுத்தாள். அதோடு, இரண்டு அழுக்குச் சேலைகளையும் எடுத்துக் கொண்டு, மூக்கம்மாளும் முத்துவும் கிளம்பினார்கள்.
பொழுது பொல பொலவென்று விடிய ஆரம்பித்தது.
” சீக்கிரம் போகணும்டா. நமக்கு முன்னாடி யாராவது போய்ட்டா என்ன செய்றது?” என்று வேகு வேகு வென்று இருவரும் நடந்தார்கள். அடிக்கடி தன் இடுப்பை விட்டு நழுவும் டவுசரை மேலே இழுத்து அரைஞாண் கயிற்றில் சொருகிக்கொண்டு நடையைக் கட்டினான் முத்து.
ஊரை விட்டு ஓடைக்குள் இறங்கினார்கள். புலரும் பொழுதைப் பார்த்து
” சூரிய பகவானே, இன்னைக்கு ஏதாவது கெடைக்கணும்” என்று தன் இரு கைகளையும் தலைக்கு மேலே எடுத்துக் கும்பிட்டாள் மூக்கம்மாள்.
செக்கச் சிவந்த வானம் சூரியனைப் பெற்றெடுக்க தயாராக இருந்தது.
ஓடையின் இரு புறமும் வளர்ந்து நின்றிருந்தன நாணல் செடிகள். ஓடைக்கரையின் மேலே இருந்த சுடலைமாடன் சாமி கல்லைப் பார்த்து, “சாமி இன்னைக்கு ஏதோ நல்ல வரும்படி கிடைக்கணும். வெறுங்கையோடு வீடு திரும்பக் கூடாது சாமி ” என்று பேசிக் கொண்டே மாட்டு வண்டித் தடம் பதிந்த ஓடை வழியே நடக்க நடக்க அவர்கள் கண்ணில் தூரம், தூரமாகிக் கொண்டே போனது.
“இன்னைக்கு காளப்பன் தோட்டத்துக்கு போலாமா? ” என்று மூக்கம்மாள் சொல்ல
” சரி ஆத்தா அங்கயே போகலாம்” என்று இருவரும் நடந்தார்கள் . பனி படர்ந்த வரப்பில் நடந்து கொண்டிருந்த முத்து சரட்டென்று வழுக்கி கீழே விழுந்தான்.தூக்கிவிட்டாள்.
” அட புல்லுத் தடுக்கிப் பயலே. கால ஊண்டி மிதிச்சு நல்லா நடந்து வர வேண்டியதுதான ? ” என்று சொல்லிக்கொண்டே கீழே விழாமல் புல் முளைத்த வரப்பில் நடையைக் கட்டினாள் மூக்கம்மாள்.
தூரம் பார்த்தாள். நெல்வயல் அறுவடை திருநாள் அவள் நினைவில் விரிந்தது.
” வெளைஞ்ச நெல்லு, தல சாஞ்சு கெடக்குது. பச்சக் கிளிக பாட்டுப் பாடித் திரியுது ” என்று பாடல் பாடிக்கொண்டே நெல் அறுவடை செய்தனர் ஆட்கள்.
“இங்க பாருங்க. ஈசான மூலையில் இருக்கிற நெல்லுக்கதிரை சின்னத்தாய் அறுத்து முடிச்சதும் தான், எல்லாரும் வயலுக்குள்ள இறங்கணும் ” என்று தோட்ட உரிமையாளர் காளப்பன் சொல்ல,
தங்க நிறத்தில் விளைந்து கிடந்த நெல்லை , தங்கள் இரு கைகளால் தொட்டு வணங்கி, அறுவடை செய்து, முடி முடியாகக் கட்டி வெடித்துப் பிளந்து கிடந்த கரம்பை மண் நிலத்தில் போட , அறுக்கும் போதும் முடியாய் கட்டி நிலத்தில் போடும் போதும், சிறிது சிறிதாய் சிதறிக் கிடந்தன நெல் மணிகள்.அறுவடை செய்த நெல்லை எல்லாம் அள்ளிப் போனபிறகு நெல் வயல் எல்லாம் வெறும் வேர்கள் மொட்டு மொட்டாக நின்று கொண்டிருந்தன.
அறுவடைத் திருநாள் முடிந்த வயல்வெளி, மூக்கமாளின் நினைவுகள் அவிழ நெல் வயலைப் பார்த்தாள்.
“ஆத்தா, எல்லாரும் நெல்லு விளைஞ்ச வயல்ல தான் அறுவடை செய்ய வருவாங்க. நாம என்னாத்தா நெல்லு அறுத்த எடத்துக்கு வந்திருக்கம் “
என்று முத்து கேட்க
” பணக்காரங்களுக்கு தான்டா நெல்லு வயல் .நமக்கு அவங்க அறுவடை செஞ்சதுக்கு அப்புறம் சிதறிக்கிடக்கிற நெல்லு தான் நம்ம பொழப்பு “
என்று சொன்ன மூக்கம்மாள் தன்னுடைய கையில் இருந்த, பெரிய விளக்கமாற்றை எடுத்து, வயல் வெளியைக் கூட்ட ஆரம்பித்தாள். அவள் கூட்டும் காலடிச் சத்தத்தைக் கேட்டு ஓடி ஒளிந்தன சில எலிகள் .அவள் குனிந்து கூட்டும்போது ,சூரியன் கொஞ்சம் மேலே வந்திருந்தது. பூமியில் கிடக்கும் நெல்மணிகள் தெளிவாகத் தெரியும் அளவிற்கு வெளிச்சம் பரப்பியது, வானம். சரட்டு, சரட்டு என்று விளக்கமாற்றை வைத்து கூட்டினாள் மூக்கம்மாள்.
” ஏய்.. யாரது வயல்ல ? “
என்று காளப்பன் குரல் கொடுக்க
” நான் தான்யா மூக்கம்மா “
என்று எதிர் குரல் கொடுத்தாள் மூக்கம்மாள்.
“சரி… சரி… நெல்லு கூட்ட வந்திருக்கீங்களா ? “
” ஆமாய்யா ” ” சரி ,சரி. நெல்லக் கூட்டிட்டு என்னைய வந்து பாரு “.
” சரிங்க ” என்ற மூக்கம்மாள்,
” ஏ… முத்து… கூட்டுன இந்த மண்ணச் குமிச்சு வைக்கிறேன். நீ இந்தச் சீலையில அள்ளி வையி. “
” சரி ஆத்தா”
என்று சொன்ன முத்து
” ஆத்தா கூட்டிய கரம்பை மண்ணுடன் கலந்த நெல்லைச் சேலையில் அள்ளினான். மொத்த வயலையும் மூக்கம்மமாள் கூட்டி முடிக்கும் போது உச்சிக்கு வந்திருந்தது சூரியன்.
” சரி , அம்புட்டுத் தான், எல்லாம் கூட்டியாச்சு, கிளம்பலாமா?
என்று மூக்கம்மாள் சொன்னபோது
” ஏய்.. மூக்கம்மா, என்ன ஆள் இல்லாத வயல்ல வந்து நெல்லக் கூட்டிக்கிட்டு இருக்க?”
” இல்ல சாமி, நான் காளப்பன் ஐயா கிட்ட கேட்டுட்டு தான் கூட்டிட்டு இருக்கேன் . நாங்க திருட வரல. “என்று மூக்கம்மாள் சொல்ல
” நெல்ல அறுத்துட்டுப் போனாலும் கீழே சிந்துன நெல்லும் மண்ணும் காட்டுக்காரங்களுக்கு தானே ?என்று மூர்க்கமாகக் குரல் கொடுத்தான்.
” இப்ப நான் என்ன செய்யணும்? சாமி ? “
என்று பதில் குரல் கொடுத்தாள் மூக்கம்மாள்
” நீ கூட்டுன நெல்லும் மண்ணும் பாதியைக் கொடுத்துட்டு போ “
என்று அவன் கேட்க
” சாமி, குறுக்கு வலிக்க இந்த மொத்த வயலையும் கூட்டி எடுக்கஎன் உடம்பே விண்ணு விண்ணுன்னு வலிக்குது .இத கொண்டு போயி , மண்ணுல இருந்து நெல்லப் பிரிச்சி எடுத்தா, நெல்லு கொஞ்சங் கூட வராது, இதுல பங்கு கேக்கிறது நியாயமா? “என்று மூக்கம்மாள் குமுற
“காளப்பன் தான் பங்கு கேக்கச் சொன்னாரு “என்று அவன் சொல்ல,
மண்ணும் நெல்லும் கலந்த கரம்பை மண் மூட்டைச் சேலையை அவிழ்த்தான், முத்து.
கரம்பை மண்ணில் கலந்த நெல், மண்ணைப் பாதிக்குப் பாதி பங்கு போட்டான், வந்தவன்.
கூட்டிய மண்ணைப் பாதிக்குப் பாதி பங்கு கொடுத்து விட்டு, மீதியைக்கட்டித் தன் தலையில் தூக்கிக்கொண்டு நடந்தாள் மூக்கம்மாள். அவளின் சேலையைப் பிடித்துக் கொண்டு பின்னாலேயே நடந்து வந்தான் முத்து.
” இந்த மனுசங்களே இப்படித்தான்.இந்த மண்ணக் கூட்டி வயித்த கழுவ விட மாட்டாங்க. இதுலயும் பாதி பங்கு கேக்குறாங்களே ? “
என்று கண்களில் கண்ணீர் வழிய, பாதியைக் கொடுத்துவிட்டு மீதியைத் தலைச்சுமையாகத் தூக்கி வந்தாள் மூக்கம்மாள்.
” எதுக்கு ஆத்தா, இந்த மண்ணக் கூட பாதி கேக்குறாங்க? “
என்று முத்து கேட்க
” அது தான்யா முதலாளிங்க வர்க்கம். இது அவங்க தோட்டம் இல்லையா ? நாதியத்த நம்மள மாதிரி ஆளுகளுக்கு தோட்டம், தொறவு எதுவும் இல்ல. வயித்துக்குப் பொழப்புக்கு அறுவடை செஞ்ச இந்த மாதிரி வயல்கள கூட்டுனா தான் உண்டு “
என்று கலங்கியபடியே சொன்னாள் மூக்கம்மாள். காடு கடந்து , ஓடையில் நடந்து, ஊருக்குள் வரும் போது, மூக்கம்மாள்,தூக்கிப் போன தலைச் சுமையை பார்த்த ஊர் மக்கள்
“என்ன மூக்கம்மா பெரிய சுமையா கொண்டு போற போல? “
என்று பேசிக் கொண்டார்கள்.வீட்டுக்குப் போன மூக்கம்மாள், தலையில் சுமந்து போன மண்ணைச் கீழே இறக்கி வைத்தாள் .
” முத்து, என் கண்ணு, அந்தத் துணி எடுத்துட்டு வாய்யா”
என்று மூக்கம்மாள் சொல்ல, ஓடிப் போய் அவள் சொன்ன துணியை எடுத்து வந்தான். கொட்டிய மண்ணிலிருந்து துணியை ஒற்றி ஒற்றி எடுக்கத் துணியில் ஒட்டிக்கொண்டது கரம்பை மண்ணில் கலந்து கிடந்த நெல்மணிகள். லாவகமாக அதைத் தன் கையில் தட்டி விட்டுக் கொண்டே இருந்தாள். இன்னொரு துணியில் கொஞ்சமாய் சிதறி விழுந்தன, நெல்மணிகள். ஆறு மரக்கால் கரம்பை மண்ணைத் பிடரி நரம்பு வலிக்கத் தூக்கி வந்து அவள் துணி சுருட்டி நெல் பிரித்த போது அரைப்படி நெல் தான் தேறியது
” என்ன ஆத்தா, கொஞ்ச நெல்லு தான் இருக்கு .ஆறு மரக்கா கரம்பு மண்ணு மிச்சமிருக்கு. இதுக்கா இவ்வளவு தூரம் நாம உழைச்சோம்”
என்று நெக்குருகிக் கேட்டான் முத்து.
“அது தான்யா ஏழை பாழைகளோட வாழ்க்கை. பயன்படறது கொஞ்சமாக இருக்கும். பயனில்லாமல் போறது தான் அதிகமாக இருக்கும்.கழுத்து நரம்பு வலிக்க வலிக்க நாம தூக்கிட்டு வந்தது, இந்தக் கரம்ப மண்ணத் தான்யா. இந்த அரைப்படி நெல்லு தான் நமக்குச் சொந்தம் “
என்று துணியில் சுருட்டிப் பிரித்த நெல்லைக் கையெடுத்துக் கும்பிட்டாள், மூக்கம்மாள்.
” ஆத்தா, இங்க பாரு நெறய எறும்புக நம்ம சுத்திச் சுத்தி வருது. அதுக்கு பசிக்குது போல ஆத்தா “
” ஆமாடா , அதுவும் உசுருக தான, அதுக்கும் பசிக்கும்ல. அந்த நெல்லுல கொஞ்சம் அள்ளிப் போடு” என்றாள் மூக்கம்மாள்.
தங்களுக்குக் கிடைத்த கொஞ்ச நெல்லிலிருந்து, ஒரு கை நெல்லை அள்ளி ஊறும் எறும்புகளிடம் வீசினான் முத்து. தூரப் போன எறும்புகள் நெல் விழுந்த திசையை நோக்கி வர ஆரம்பித்தன
முத்துவும் ஆத்தாவும் நெல்லைத் தின்னும் எறும்புகளை வெறிக்கப் பார்த்தார்கள்.
அடுத்த, அறுவடைத் திருநாள் சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார்கள் இருவரும்.
#trending news #trending news tamil #makkalkural #மக்கள்குரல் #சென்னை
![]()





