செய்திகள்

அறிவாலயம், அண்ணா சாலை முற்றுகை: துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்

Makkal Kural Official

1,100க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை, டிச. 31:
சென்னை மாநகராட்சியில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் மறியல் நடத்தப்பட்டது. இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில மாதங்களாக துாய்மை பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் தடுத்தனர். இதையடுத்து, அறிவாலயத்தின் பின்புறம் உள்ள ஸ்கீம் சாலை வழியாக திடீரென நுழைந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அதேபோல், அண்ணா சாலையில் பல பெண் துாய்மை பணியாளர்கள் சாலையின் நடுவே அமர்ந்து மற்றும் படுத்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒரு பெண் பணியாளர் உடல்நலக் குறைவால் மயக்கமடைந்ததாக கூறப்படுவதையடுத்து, அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மதியம் கருணாநிதி நினைவிடம் மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகிலும் போராட்டம் நடைபெற்றது. இரவு நேரத்தில் ரிப்பன் மாளிகை அருகே மீண்டும் திடீர் போராட்டம் வெடித்ததால், போலீசார் நிலைமையை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இறுதியாக, போராட்டத்தில் ஈடுபட்ட 1,100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பணியாளர்கள், “இந்த வேலையை நம்பியே எங்கள் வாழ்க்கை ஓடுகிறது. ஐந்து மாதங்களாக போராடியும் எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தமிழக அரசு மற்றும் முதல்வர் நேரடியாக தலையிட்டு எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,” என தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *