தைலாபுரம், ஜூலை 3–
அருள் எம்.எல்.ஏ.வை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே அதிகாரம் தொடர்பான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் நிர்வாகிகள் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, ராமதாசுக்கு ஆதரவாக பேசிய அருள் எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது:
பா.ம.க., நிர்வாகிகளை நீக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எம்.எல்.ஏ., அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. ஜி.கே.மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகு தான் நீக்க முடியும். கட்சியில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. என் மனம் வேதனைப்படும் அளவு செய்கின்றனர். எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, நான் கட்சியை வழி நடத்தி கொண்டு இருக்கிறேன். கட்சியின் இணை செயலாளர் பொறுப்பில் அருள் தொடர்வார்.
பூம்புகாரில் ஆகஸ்ட் 10ம் தேதி பா.ம.க., மகளிர் மாநாடு நடத்துகிறோம். அ.தி.மு.க., தி.மு.க., உடன் பா.ம.க., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என பரவும் தகவல் வதந்தி. பா.ம.க., செயற்குழு, பொதுக்குழுவில் கருத்துகளை கேட்ட பிறகு தான் கூட்டணி குறித்து பதில் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()




