குருகிராம், ஜூலை 11–
வளர்ந்து வரும் பிரபல இளம் டென்னிஸ் வீராங்கனையான தன் மகளை தந்தையே துப்பாக்கியால் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
நாளுக்கு நாள் பெற்ற மகளின் வளர்ச்சி, பெருமை கண்டு பொறுக்கமாட்டாமல் ஆத்திரம் கண்ணை மறைக்க, 25 வயது மகள் ராதிகாவை 51 வயது தந்தை தீபக் யாதவ் சுட்டுக் கொன்றிருக்கிறார்.
இந்தக் கொடூர சம்பவம் அரியானா குருகிராமம் பகுதியில் நேற்றிரவு (வியாழன்) 10.30 மணியளவில் நடந்துள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
25 வயதான ராதிகா யாதவ், மாநில அளவிலான துடிப்பான டென்னிஸ் வீராங்கனை. 2000ம் ஆண்டு மார்ச் 23ந் தேதி பிறந்தவர். வெறும் வீராங்கனை மட்டுமல்ல, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் இரட்டையர் பிரிவில் 113வது இடத்திலும், ஹரியானா மகளிர் இரட்டையர் பிரிவில் 5வது இடத்திலும் இருந்த திறமைசாலி. இவரது தந்தை தீபக் யாதவ், 51 வயது. மகள் வெற்றிகரமான ஒரு டென்னிஸ் அகாடமியை நடத்தி வருவதால், தனது சொந்த ஊரான வசிராபாத் மக்களால் “மகளின் வருமானத்தில் வாழ்கிறார்” என்று கேலி செய்யப்படுவதாக அவர் தாழ்வுணர்ச்சியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கண்ணை மறைக்க மகளை சுட்டுக் கொன்றிருக்கிறார்.
5 முறை சுட்டார்…
துப்பாக்கியால் 5 முறை சுட்டதில் 3 தோட்டாக்கள் ராதிகா மீது பாய்ந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். குருகிராமின் செக்டார் 56 காவல் நிலையத்தில் ‘எஃப்ஐஆர்’ பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தந்தை தீபக் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகின்றது.
“தந்தை அகாடமியை மூடச் சொன்னார், ஆனால் அவள் மறுத்துவிட்டாள். அந்தத் தகராறில் கோபத்தில் அவர் மகளை சுட்டுக் கொன்றார்” என்று உதவி போலீஸ் கமிஷனர் யஷ்வந்த் யாதவ் கூறினார்.
இன்ஸ்டாகிராம்
ரீல்ஸ்களாலும் தகராறு…
சமூக வலைத்தளங்களில் ஆர்வமுள்ள ராதிகா, இன்ஸ்டாகிராமில் ரீல்கள் இடுவதை விரும்பினார், அத்தகைய ஒரு பதிவு ஏற்கனவே அவரது தந்தையுடன் மோதலை ஏற்படுத்தியிருந்தது. அந்த ரீல்களை நீக்க வேண்டும் என்று தந்தை கோரினார். மகள் மறுத்தாள். இதுவே அவரது கோபத்தை தூண்டி சுட்டுக் கொல்லும் நிலைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
ராதிகா யாதவ் – ஒரு டென்னிஸ் வீராங்கனை மட்டுமல்ல. ஸ்காட்டிஷ் ஹை இன்டர்நேஷனல் பள்ளியின் ஒரு திறமையான பட்டதாரி, அவர் தனது பள்ளி ஆண்டுகளில் இருந்தே டென்னிஸை வாழ்வின் லட்சியமாக ஏற்றுக்கொண்டார். சமீபத்தில் தோள்பட்டை காயம் ஏற்பட்டு பிசியோதெரபி செய்து வந்த போதிலும், அவரது மன உறுதி உடையவில்லை. அவர் தனது அகாடமியை தொடர்ந்து நடத்தி, இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளித்து வந்தார்.
அவர், 2018 ஜனவரியில் அகில இந்திய டென்னிஸ் போட்டியில் 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 75வது இடத்தைப் பிடித்தார், 11 வாரங்களுக்கு முதல் 100 இடங்களில் இருந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் அவரது சிறந்த தரவரிசை 35 ஆகவும், மகளிர் இரட்டையர் பிரிவில் 53 ஆகவும் இருந்தது.
![]()





