செய்திகள்

அரியலூர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Makkal Kural Official

அரியலூர், ஜூலை.16-

அண்ணா தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரத்தை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று அரியலூரில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள நேற்று அரியலூருக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து, ஒரு ஓட்டலில் தங்கினார்.

அங்கு விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, மும்முனை மின்சாரம் கிடைப்பதில் உள்ள சிக்கல், நெல், கரும்புக்கான ஆதார விலை நிர்ணயம், சம்பா பயிருக்கான நிவாரணத்தொகை வழங்கப்படாதது, நகைக்கடன், பயிர்க்கடன் உள்ளிட்டவை தள்ளுபடி செய்யப்படாதது மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

அண்ணா தி.மு.க.வை பொறுத்தவரை விவசாயிகள் கண் போன்று பாதுகாக்கப்பட்டார்கள். கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிலங்கள் கணக்கிடப்பட்டு அரசு சார்பில் மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் ரூ.186 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. நவீன முறையில் விவசாயிகள் பயிரிடும்போது பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை காக்க ‘உழவன் செயலி’ என்ற செயலி வெளியிடப்பட்டது. விளைபொருட்களின் விலை, பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை காக்கும் வழிமுறை போன்றவை அந்த செயலியில் இடம் பெற்றிருந்தது.

அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடனை 5 ஆண்டு ஆட்சிக்குள் 2 முறை தள்ளுபடி செய்தது அண்ணா தி.மு.க. மட்டும்தான். கொரோனா காலக்கட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் இருந்தது. அப்போது பொதுப்பணித்துறைக்கு கீழ் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் முதற்கட்டமாக சுமார் 6 ஆயிரம் ஏரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக சுமார் ரூ.1,240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டது. அதில் உள்ள வண்டல் மண்ணும் விவசாய நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு பல நல்ல திட்டங்கள் அண்ணா தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது.

இதேபோல் பருத்தி மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டபோது, அந்த நிலங்களை உடனடியாக கணக்கிட்டு அதற்குரிய மருந்து தெளிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு மெட்ரிக் டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஆதார விலை மற்றும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 தருவதாக கூறினார்கள். ஆனால் சட்டமன்றத்தில் முறையிட்டும் இதுவரை தரவில்லை. எனவே அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்றைக்கு நெசவு தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி தான் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நான் முதலமைச்சராக இருந்தபோது, ரூ.300 கோடி மானியம் வழங்கப்பட்டது. பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இதுபோன்ற பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நெசவு தொழிலாளர்களை வாழ வைத்த அரசு அண்ணா தி.மு.க. அரசு தான். நான் முதலமைச்சராக இருந்தபோது மும்முனை மின்சாரம் வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தவுடன் 1.4.2021 முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என உத்தரவிட்டு அதனை நடைமுறைப்படுத்தினோம். ஆனால் அதனை இந்த அரசு கைவிட்டு விட்டது. மீண்டும் அண்ணா தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

வேளாண் எந்திரங்களில் பெண் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கு 50 சதவீத மானியமும், ஆண் விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட்டது. அதிலும் முறைகேடு நடக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் பதிவு நடைபெற்றது. அதையெல்லாம் தி.மு.க. அரசு ரத்து செய்துவிட்டு அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு எல்லாம் வேளாண் எந்திரங்கள் கொடுத்தார்கள். விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானத்திற்காக சேலம் மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டது. இந்த கால்நடை பூங்கா மூலம் விவசாயிகளுக்கு கலப்பின மாடுகளை கொடுத்தால் ஒரு நாளைக்கு 40 லிட்டர் பால் கொடுக்கும்.

அதுமட்டுமின்றி விவசாயிகளை கால்நடை பூங்காவிற்கு அழைத்து சென்று கால்நடைகளில் நோய் தாக்குதல், அதற்கான சிகிச்சை முறை குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கையேடும் வழங்கப்பட்டது. ஆனால் அங்கு முதற்கட்டமாக கால்நடை மருந்துகளின் ஆராய்ச்சியை மட்டும் தொடங்கி வைத்தேன். ஆராய்ச்சி நிலைய கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டிக்கிடந்தது. ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது வரை அது செயல்பாட்டுக்கு வரவில்லை. பின்னர் சட்டமன்றத்தில் நான் கோரிக்கை வைத்ததின் காரணமாக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கால்நடை பூங்கா முழுவீச்சில் செயல்படுத்தப்படும். அண்ணா தி.மு.க. ஆட்சி உங்களுக்கான ஆட்சி என்று கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், தொகுதி பொறுப்பாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *