செய்திகள்

அரசு பஸ் – மோட்டார் சைக்கிள் மோதல்: பெண் உள்பட 2 பேர் பலி

Makkal Kural Official

திண்டுக்கல், செப். 10–

திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நூற்பாலை தொழிலாளிகள் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பூவன்கிழவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (24). இவரது உறவினர் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (22). இவர்கள் இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியும் புவனேஸ்வரியும் இன்று காலை வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலைக்கு பணிக்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில், தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப கோபால்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பகுதியில் சாலை கடக்க முற்பட்டபோது, திண்டுக்கலில் இருந்து நத்தம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பாலசுப்பிரமணியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், இருவரையும் பொதுமக்கள் மீட்டு 108 அவசர ஊர்தியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் இறந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூற்பாலை பணிக்காக சென்ற இருவர் அரசுப் பேருந்து மோதி பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *