செய்திகள்

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் :

Makkal Kural Official

சென்னை, ஜூலை 22–

நடப்புக் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் கோவி. செழியன், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பபடவுள்ள 574 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு இணையதளத்தினை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:–-

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025–-2026–ம் கல்வியாண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிட முதலமைச்சரால் ஆணையிடப்பட்டு, அவ்விடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. இதில் நிரந்தர ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க 574 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் உரிய கல்வித் தகுதியுடன் ஒளிவுமறைவற்ற முறையில், வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பிட கல்லூரிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்ப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4 :

கடைசி நாள்

இதற்கான விண்ணப்பங்களை www.tngasa.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 34 பாடப்பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 574 பணியிடங்களின் விவரங்கள் மேற்கண்ட இணையதளத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள நபர்கள் www.tngasa.org என்ற இணையதளத்தில் 21–ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 4ந் தேதி ஆகும். தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *