சென்னை, ஜன. 22–
சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் 112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்புக்கான ஆணையினை வழங்கினார்.
இன்று இந்தியாவிலேயே உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இக்கல்வி ஆண்டின் (2025-–2026), மாணவர் சேர்க்கையில், புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுய நிதிக் கல்லூரி என அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பத்திற்கேற்ப மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டது. அதன்படி, இன்று 112 அரசு கல்லூரிகளுக்கான நிதி ஒப்பளிப்பு ஆணையினை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் உயர்கல்வித்துறைச் செயலாளர் பொ. சங்கர், கல்லூரிக் கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்கக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அறிவியல் கல்வியையும் ஆய்வக வசதியையும் மேலும் மேம்படுத்துவதன் வாயிலாக உயர்கல்வியில் தமிழ்நாடு உலகத்தரத்தை எட்ட முடியுமென்ற முதலமைச்சரின் செயல்திட்டத்திற்குச் சிறப்புச் சேர்ப்பதாக இந்நிகழ்வு அமைந்தது.
![]()





