சென்னை, ஜூலை 7–
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து சேர்க்கைக்காக காத்திருப்பதை அறிந்து, முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 2025–-26–ம் கல்வியாண்டிற்கு மாணவர்கள் உயர்கல்வி பெற 20% கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:–- கடந்த நான்காண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை விகிதத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
இவ்வாண்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பத்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த முதலமைச்சர் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாணவர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20% மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15% இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10% இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
![]()





