சேலம், ஜன. 5:
’’அரசு ஊழியர்களை தந்திரமாக ஏமாற்றியிருக்கிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி பிரதான சாலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை. சேலம் மாவட்ட தொகுதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதற்கு இந்த மக்களே சாட்சி. அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
சேலத்திலுள்ள 11 தொகுதிகளிலும் அண்ணா திமுக கூட்டணி வெல்லும். அந்த அளவுக்கு அண்ணா திமுக ஆட்சிகளில் மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவந்தோம். திமுக ஆட்சிக்கு வந்து சேலத்துக்கு ஒரு திட்டமாவது கொண்டுவந்தார்களா? நாம் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தியதுதான் திமுகவின் சாதனை.
எவ்வளவு சிரமப்பட்டு திட்டங்களைக் கொண்டு வந்தோம். நூறு ஏரி திட்டத்தினால் 4 தொகுதிகளுக்கு நன்மை கிடைக்கும். விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெறும் திட்டம். அந்த திட்டம் துவக்கினோம், முதல் கட்டப்பணிகள் முடிந்து 6 ஏரிகளைத் திறந்துவைத்தோம், அதன்பிறகு இன்று வரை அந்த திட்டம் முழுமை பெறவில்லை. இப்படிப்பட்ட அவல ஆட்சி தொடர வேண்டுமா?
ஒரு குடும்பம் வாழ
8 கோடி மக்களை சுரண்டுவதா?
திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் நன்மை பெறவே ஆட்சி நடக்கிறது. ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இதற்கு 2026 தேர்தல் ஒரு முடிவுகட்டும்.
ஸ்டாலின் ஆட்சியை மீண்டும் தொடர முயற்சிக்கிறார், அந்த முயற்சி எந்த வகையிலும் வெற்றி பெறாது. நான்கே முக்கால் ஆண்டு தூங்கிவிட்டு இப்போதுதான் அவருக்கு ஞானோதயம் பிறந்திருக்கிறது. அதனால் புதிய திட்டங்களை அறிவித்து மக்கள் செல்வாக்கைப் பெறலாம் என்று நினைக்கிறார்.
தமிழகம் முழுவதும் போராட்டக்களமாகிவிட்டது. விவசாயிகள், வியாபாரிகள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் எல்லோரும் போராடுகிறார்கள். ஆட்சியில் நல்லது செய்திருந்தால் எப்படி போராட்டம் நடைபெறும்..?
திமுக சிறந்த ஆட்சி என்கிறார், எதில் தெரியுமா? லஞ்சம் வாங்குவதில், ஊழல் செய்வதில் சிறந்த ஆட்சி, மக்களை சுரண்டுவதில் சிறந்த ஆட்சி. அண்ணா திமுகவைப் பொறுத்தவரை மக்களுக்குத் திட்டம் போடுவதில் சிறந்த ஆட்சி. அண்ணா திமுக, திமுக ஆட்சிகளை ஒப்பிட்டு பாருங்கள்.
தமிழகத்தில் 6999 போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 104 கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்ததாக தூத்துக்குடியில் சமுகநலத்துறை அமைச்சர் பேசுகிறார். 6,999 சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு கொடுமையான ஆட்சி இது. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது
நாடு சிறப்பாக இருக்கவேண்டும் என்றால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படியல்ல, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்கள் ஒவ்வொரு நாளும் அஞ்சி வாழும் நிலை உருவாகியிருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் ஸ்டாலினுக்குக் கவலையில்லை.
திமுக என்றால் கார்ப்பரேட் கம்பெனி. கட்சி என்றால் அண்ணா திமுக தான் கட்சி.
நான் நம் மண்ணின் மைந்தன். உங்களால் எனக்கு முதல்வர் வாய்ப்பு கிடைத்தது, பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்துக்கு பொதுச்செயலாளர் என்ற அடையாளத்தை தொண்டர்கள், நிர்வாகிகள் தந்தார்கள். திமுகவில் கருணாநிதி, ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி வரத் துடிக்கிறார், அதன்பிறகு இன்பநிதி காத்திருக்கிறார். குடும்ப ஆட்சி தொடர வேண்டுமா?
திமுகவில் உதயநிதியை விட்டால் ஆளே இல்லையா? கருணநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணம் தான். எத்தனை முறை ஜெயிலுக்குப் போனார்? திமுகவில் அதிக நாட்கள் எம்.எல்.ஏவாக இருந்தவர் அண்ணன் துரைமுருகன், கருணாநிதி குடும்பத்தில் பிறக்காததால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மிசா சட்டத்தில் துரைமுருகனும் பாதிக்கப்பட்டார், ஆனாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஊதாரித்தன செலவு
ஸ்டாலின் எப்போதும் நிதி இல்லை என்கிறார், எப்படி நிதி இருக்கும்? திட்டம் நடத்த நிதி இல்லை, கார் பந்தயம் நடத்த நிதி இருக்கிறது. கார் பந்தயம் முக்கியமா? எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க அரசு பணம் 82 கோடி ஒதுக்கீடு செய்கிறார். எழுதும் பேனாவை மாணவர்களுக்கு கொடுத்தால் பாராட்டுவார்கள். அரசு பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறார். மக்கள் வரிப்பணத்தை செலவு செய்கிறார்கள்.
அண்மையில் எனக்குக் கிடைத்த தகவல் படி, சுய உதவி குழுக்கள் எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய்வதற்கு 44 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள், இன்னும் 2 மாதங்களில் கொள்ளையடிக்க ஒதுக்கியுள்ளனர். ஆய்வு முன்னரே செய்திருந்தால் பரவாயில்லை. இப்போது நிதியை சுருட்டுவதற்காகத்தான் ஆய்வு என்ற போர்வையில் ஒதுக்கியுள்ளனர். இதெல்லாம் அண்ணா திமுக ஆட்சியில் தோண்டியெடுத்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா திமுகவுக்கு கூட்டணி அமையவில்லை என்று ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே பொருத்திருங்கள், கூட்டணி அமையும். எடப்பாடி கிராமத்தில் இருந்து வந்தவர் என்று சாதாரணமாக நினைத்துக்கொண்டு இருக்கிறார். அண்ணா திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும், பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்.
இப்போது மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால் தோல்வி பயத்தில், மேலும் 17 லட்சம் பேருக்கு விதிகளைத் தளர்த்தி உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார். ஏன் அப்போதே மக்கள் பிரச்னை கண்ணுக்கு தெரியாதா? அதுவும் பெண்களின் கஷ்டங்களைப் பார்த்து கொடுக்கவில்லை, அடுத்தாண்டு தேர்தல் வருவதால் ஓட்டுக்காகத்தான் கொடுக்கிறார். இதை முன்பே கொடுத்திருந்தால் என்ன?
திமுக அடையாளம்
தெரியாமல் போகும்
ஆட்சி இருப்பதால் போகும் பக்கமெல்லாம் மக்களை அழைத்து பேசிக்கொண்டிருக்கிறார். அடுத்து எதிர்க்கட்சி என்று வரும்போது திமுக என்ற கட்சி அடையாளம் தெரியாமல் போய்விடும். அந்தளவுக்கு ஊழல் மலிந்துவிட்டது. நகராட்சி நிர்வாகத்துறையில் 800 கோடிக்கு மேல் ஊழல், அமலாக்கத்துறை அதை கண்டுபிடித்து எப்ஃ.ஐ.ஆர் போடச்சொல்லி கடிதம் எழுதியது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, அண்ணா திமுக ஆட்சியில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எப்போது பார்த்தாலும் ஒரு செங்கல்லை தூக்கிக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று கேட்கிறீர்களே..? பல லட்சம் செங்கல்லை கொண்டு கட்டப்பட தலைவாசல் கால்நடை பூங்காவை ஏன் முடக்கி வைத்திருக்கிறீர்கள்? என்ன கன்று வேண்டுமோ, அதை கொடுக்கும் ஆராய்ச்சியையும் மூடிவிட்டனர். இது விவசாயிகள் விரோத அரசு.
மக்கள் செல்வாக்கு இழந்து பயத்தில் அஞ்சி புதிய திட்டம் அறிவிக்கிறார். தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவோம் என்றார். ஆனால், இப்போது ஒரு புதிய திட்டம் கொண்டுவந்திருக்கிறார். அரசு ஊழியர் கேட்பது பழைய ஓய்வூதிய திட்டம். ஆனால் ஸ்டாலின் குறிப்பிடுவது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம். பெயரை மாற்றி இன்று அவர்களை ஏமாற்றுகிறார். வேலை நிறுத்தத்தை நிறுத்த தந்திரமாக உத்தரவு வெளியிட்டுள்ளனர். ஸ்டாலின் அவர்களே நீங்கள் அரசாணை வெளியிடுகிறபோதுதான், அரசு ஊழியர்கள் இந்த அரசைப் பற்றி தெரிந்துகொள்வார்கள்.
ஜல்லி விலை, எம்சாண்ட் விலை உயர்வு. கிரஷர் உரிமையாளர்களை மிரட்டி ஒரு கிரஷருக்கு 30 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். தமிழகத்தில் 3000 ஜல்லி கிரஷர் இருக்கிறது. ஒரு கிரஷருக்கு 30 லட்சம் என்றால் 900 கோடி ரூபாய் வசூல் செய்கிறார்கள். முதல் கட்டமாக கோவை மாவட்டத்தில் நான்கரை கோடி ரூபாய் கொடுத்துவிட்டனர்,
சேலம் மாவட்டத்தில் பர்மிட் கொடுக்க வேண்டும் என்றால் பணத்தை கொடுத்தால் தான் கொடுப்போம் என்கிறார். மாவட்ட ஆட்சியருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன், ஏற்கனவே கட்டுமான தொழில் சரிந்துவிட்டது, இந்த சூழலில் லஞ்சம் கேட்டால் ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்துவார்கள் அதனால் மக்கள் பாதிப்படைவார்கள். அதனால் மாவட்ட ஆட்சியர்கள் முறையாக நடந்துகொள்ள வேண்டும். பர்மிட் கேட்பவர்களுக்கு கொடுங்கள். திமுக அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன், அடுத்து அதிமுக ஆட்சி அமைவது 100% உறுதி. அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
இவ்வாறு எடப்பாடி பேசினார்.
இந்த கூட்டத்தில் திமுக., காங்கிரஸ், விசிக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து 2 ஆயிரம் பேர் எடப்பாடி முன்னிலையில் அண்ணா திமுக மேடையில் இணைந்தனர்.
![]()





