செய்திகள்

அரசுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை கவர்னர் வைத்துள்ளார்: அமைச்சர் ரகுபதி பேட்டி

Makkal Kural Official

சென்னை, ஜன. 20:

அரசுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை கவர்னர் வைத்துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பா.ஜ.க.வின் பிரதிநிதியாக சட்டசபைக்கு வந்துள்ளார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் இறுதியில் தேசிய கீதம் பாடுவதும் சட்டசபையின் மரபு. ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது மைக் ஆப் செய்யப்பட்டது என ஆளுநர் மாளிகை கூறியது முற்றிலும் தவறு.

ஆளுநர் உரையை படியுங்கள் என்று தான் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். எவ்வளவு தாழ்மையுடன் கேட்க வேண்டுமோ அவ்வளவு தாழ்மையுடன் கேட்டார் சபாநாயகர். ஆளுநரின் மைக் அணைக்கப்படவில்லை.

ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டதாக கூறியது பச்சை பொய். எதிர்க்கட்சிகளே சொல்லாத பொய்யை ஆளுநர் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.

போதைப்பொருள்

உற்பத்தி கிடையாது

தேர்தல் ஆண்டு என்பதால் ஆட்சியின் மீது குறை சொல்ல வேண்டும் என்று கவர்னர் கனவு காண்கிறார். சட்டசபையில் உரையை வாசிக்காமல் கவர்னர் உரையை புறக்கணித்தது திட்டமிட்ட செயல். தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தி கிடையாது. கவர்னர் மாளிகை அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கவர்னர் கூறி வருகிறார். கவர்னர் உரை நேரலை வராததற்கு தொழில்நுட்ப கோளாறு பிரச்சினையாக இருக்கலாம்.

அரசுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை ஆளுநர் வைத்துள்ளார். தமிழக அரசின் முதலீடு ஈர்ப்பு குறித்து கவர்னர் கூறுவது தவறானது. பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதே மரபு. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கவர்னர் கூறி வருகிறார். மத்திய அரசே தமிழகத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக கூறுவதை கவர்னர் எப்படி மறுக்க முடியும்.

இரட்டை இலக்கத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி உள்ளது. தொழில் வளர்ச்சி இல்லை என்றால், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எப்படி அடைய முடியும். இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.

ஆண்டுதோறும் 20,000 பேர் தற்கொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும். தனிமனித தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தனிமனித தற்கொலைக்கு அரசு பொறுப்பாகாது.

தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை பிறமாநிலங்களோடு ஒப்பிடவே முடியாது. வருகிற செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக அஞ்சவில்லை. தமிழகத்திற்கு போதைப்பொருள் வருவது தடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *