செய்திகள்

அரசியல் பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5–ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Makkal Kural Official

சென்னை, டிச. 19:

அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் தமிழக அரசு வகுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் செப்டம்பர் 27–ந் தேதி விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசியல் கட்சித் தலைவர் களின் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு, எஸ்.ஓ.பி., எனும் நிலையான வழிகாட்டு விதி முறைகளை வகுக்கக் கோரியும், பல்வேறு தரப்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, தமிழ்நாடு அரசு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருப்பதாக அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் பதில் மனுக்களை தாக்கல் செய்தன. பின்னர் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பரிசீலித்து விரைவில் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5-ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும். அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஆட்சேபனை இருந்தால் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *