சென்னை, ஆக.25-–
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, சென்னையில் நேற்று கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக பா.ஜ.க. கூட்டணி சார்பில், மராட்டிய கவர்னராக இருந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த கைகயில் தமிழகத்தை சேர்ந்த கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்கான கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடா நாசீர் உசேன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டணிக்கு நன்றி
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றிய சுதர்சன் ரெட்டி, இந்திய துணை ஜனாதிபதி பொறுப்புக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர். அதனால் தான், இந்தியா கூட்டணி சார்பில், அவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்.
சுதர்சன் ரெட்டியை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து அறிவித்த இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா கூட்டணியினர் மட்டுமில்லை, ஜனநாயகத்தின் மீது, மக்களாட்சித் தத்துவத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அத்தனை பேரும் சுதர்சன் ரெட்டியைத் தான் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
சுதர்சன் ரெட்டி, நீதிபதியாக பணியாற்றிய காலத்தில், நேர்மையாக, சுதந்திரமாக செயல்பட்டு, மக்களுடைய உரிமைகளையும், சமூகநீதியையும் உயர்த்திப் பிடித்து, அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும் போற்றி பாதுகாத்தவர். பா.ஜனதாவினர் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க நினைக்கின்ற இந்த நேரத்தில், அரசியல் சட்டத்தை பாதுகாத்த நீதிபதியான இவர், அதை பாதுகாக்கின்ற பொறுப்புக்கு தேவைப்படுகிறார். அரசியலமைப்புச் சட்டத்துக்காகவும், தமிழ்நாட்டுக்காக வும், முற்போக்காகவும், மக்களுக்காக வும் பேசுகின்ற இவரை நாம் முன்மொழிய, இதைவிட பெரிய காரணம் தேவையா?
நிதிபதி மீது பழி
ஆனால், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இவரை நக்சல் என்று சொல்கிறார். ஒரு உள்துறை மந்திரி, தன்னுடைய பொறுப்பை மறந்து, ஒரு முன்னாள் நீதிபதி பற்றி அபாண்டமாக பேசி இருக்கிறார். அவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அந்த கையாலாகாத நிலையை மறைக்க, நீதிபதி மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவர் இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கிறார். அவரை ஆதரிப்பது தான் நம்முடைய முன்னால் இருக்கின்ற கடமை. சட்டநீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிய, வாதாடிய, தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் காக்க, மக்களாட்சியைக் காக்க, அரசியலமைப்பைக் காக்க துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்று வரவேண்டும் என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசியல் சார்பின்றி பொறுப்பு
பின்னர், சுதர்சன் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராதவன். அதனால்தான் எதிர்க்கட்சி கள் என்னை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளதற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
துணை ஜனாதிபதி பதவி என்பது அரசியல் நிறுவனம் அல்ல. அதனை அரசியல் சார்பின்றி செயல்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. என்னை பொருத்தமான வேட்பாளராக கருதிய அனைவருக்கும் நம்பிக்கையையும் உறுதியையும் வழங்குகிறேன்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் தொடர்ந்து அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும், எனக்கும் வித்தியாசமே இல்லை. அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர், நான் ஆந்திராவில் பிறந்தவன். மற்ற வேட்பாளர் குறித்து எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வியாளர்; அவர் இந்தப் பதவியை வகித்துள்ளார். அப்துல்கலாம் போன்ற பல சிறந்தோர் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளனர். நான் அரசியல் சாசனத்தை பின்பற்றுவதால் ஒரு அரசியல் நபர் தான், ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் சேர்ந்திருப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





