செய்திகள்

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு விதிகளை வகுக்க 10 நாள் அவகாசம்

Makkal Kural Official

தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, அக். 27–

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27–ந் தேதி தவெக பிரசார கூட்டத்தில், அதன் தலைவர் விஜய் பேசியபோது, நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறுகிய தெருக்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து 5 கி.மீ.,துாரத்திற்குள் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ஊர்வலம், மாநாடு, ரோடு ஷோ நடத்துவதை தடை செய்ய வேண்டும். ஒழுங்குபடுத்த, பாதிப்புகளை தடுக்க நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில், இன்று இந்த மனு தலைமை நீதிபதி மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கட்சி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்று கூறிய நீதிபதிகள், நெறிமுறைகளை வகுக்க மாநில அரசு தவறினால் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கும் என்றும் எச்சரித்தனர். அதன்பிறகு, இந்த வழக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் ரோடு ஷோ

நடத்த அனுமதியில்லை:

ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

––––––––––––

சென்னை, அக். 27–

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27–ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதனிடையே, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்வரை அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி இல்லை என்று மதுரை கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெரிமுறைகள் வகுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது, கட்சி கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தவெக தரப்பில் வாதிடப்பட்டது. சில கட்சிகளுக்கு 11 நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சில கட்சிகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படுவதில்லை என தவெக வாதிட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்றார். மேலும், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என வாதிட்டார். வழக்கு விசாரணை ஐகோட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *