பாட்னா, நவ. 18–
பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பேற்கிறேன் என்று ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன்சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும், 4 தொகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு 100 சதவீத பொறுப்பையும் தானே ஏற்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.பாட்னாவில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:–
நாங்கள் நேர்மையாக முயற்சி மேற்கொண்டோம், ஆனால் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதனை ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. அதிகாரத்தில்கூட எங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் பீகார் அரசியல் மாற்றத்துக்கு சில பங்குகளை அளித்துள்ளோம். எங்கள் முயற்சி, சிந்தனை குறித்து நாங்கள் விளக்கிய விதத்தில் ஏதேனும் தவறு இருந்திருக்கக் கூடும். அதனால், மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கையில்லை என்றால், அதற்கு நானே பொறுப்பேற்கிறேன். தேர்தல் தோல்விக்கு 100% பொறுப்பையும் நானே ஏற்கிறேன். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வரும் 20–ந்தேதி காந்தி ஆசிரமத்தில் ஒரு நாள் மவுன விரதம் இருக்க போகிறேன். அரசியலை விட்டு வெளியேற மாட்டேன், மீண்டும் இதே பலத்துடன் நிற்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
![]()





