சென்னை, நவ.17:
சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இன்று சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்தும், அம்பத்தூர், பானு நகரில் மேம்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் முன்னேற்றப் பணிகள் குறித்தும் மற்றும் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா ஆகிய பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
2026 தை மாதத்துக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டிலும் அதேபோல் ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆவடியில் ரூ32 கோடி செலவில் நவீன பேருந்து நிலையம் உருவாக்கப்படுகிறது. ஆலந்தூர் தொகுதியில், அந்த மாவட்டத்தின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரிந்துரையின் அடிப்படையில் மேலும் ஒரு பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.
சென்னையில்
11 பேருந்து நிலையம்
இவ்வாறு, சென்னை நகரத்தில் மட்டும் 11 பேருந்து நிலையங்கள் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, கலைஞர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் — 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பேருந்து நிலையம் — கிட்டத்தட்ட 58 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
பயணிகளுக்கான வசதிகளை கருத்தில் கொண்டு, 11 கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிப்பறை வசதிகள், உணவருந்தும் கூடம், போக்குவரத்து தொழிலாளர் ஓய்வறைகள் ஆகிய அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு 140 பேருந்துகள், சுமார் 1400க்கும் மேற்பட்ட நடவைகள் இந்த பேருந்து நிலையத்துக்கு வந்துச் செல்ல உள்ளன. ஆகையால், இந்த அம்பத்தூர் பேருந்து நிலையத்தை இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க உள்ளோம்.
இவ்வாறு பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல், தாயகன் கவி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், வருவாய் அலுவலர் மு.இந்துமதி, சிஎம்டிஏ தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
![]()





