மாஸ்கோ: டிச. 18–
உக்ரைன் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்புகளை ரஷ்யா கைப்பற்றும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இந்தக் கருத்துகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தீவிர ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் இரு தரப்புகளுக்கும் இடையே இதுவரை உறுதியான தீர்வு எட்டப்படவில்லை. இத்தகைய சூழலில் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதை சமரசத்தின் ஒரு பகுதியாக பலர் கருதினர்.
இந்த பின்னணியில் வருடாந்திர கூட்டத்தில் ரஷ்ய ராணுவத் தளபதிகள் மத்தியில் உரையாற்றிய அதிபர் புடின் அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ரஷ்யா முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் தவறினால் தனது பிராந்தியக் கட்டுப்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். “ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அது நடக்காவிட்டால் நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என அவர் தெரிவித்தார்.
மேலும் ராஜதந்திர முயற்சிகள் முழுமையாக தடைபட்டால் ரஷ்யா தனது ராணுவ பலத்தை நம்ப தயாராக இருப்பதாகவும் புடின் சுட்டிக்காட்டினார். இருப்பினும் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே மோதலைத் தீர்ப்பதே ரஷ்யாவின் முன்னுரிமை என்றும் போரை முடிவுக்குக் கொண்டு வர ராஜதந்திர வழிகளையே நாடுவதாகவும் அவர் கூறினார்.
இந்த எச்சரிக்கை உக்ரைன் போர் தொடர்பான எதிர்கால நிலவரங்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
![]()





