சென்னை, ஜன. 12–
ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது அவருடைய சொந்த கருத்து. ஆனால் கூட்டணி அதிகாரம் முடிவு எடுப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் காங்கிரஸில் எழுந்து திமுக கூட்டணிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் ஐபிடிஎஸ் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றை சுட்டிக்காட்டி தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்றும், அதிகாரப் பங்கீட்டிற்கு நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்தார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் கோரிக்கையை காங்கிரஸின் 2ஆம் கட்ட தலைவர்கள் ஆமோதித்தனர்.
இத்தகைய சூழலில் தான், ஆட்சியில் பங்கு இல்லை என்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கேட்பது அவர் உரிமை. நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பது எப்போதும் கிடையாது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது. தனிப்பட்ட கட்சியினுடைய ஆட்சி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கூட்டணி ஆட்சியெல்லாம் இருக்காது. அதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் அசீனா சையது தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார். அதேபோல் பிரியங்கா காந்தி 54 வது பிறந்தநாள் ஒட்டி மகளிர் காங்கிரஸ் சார்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
செல்வபெருந்தகை
பேட்டி
இந்த நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை கூறியதாவது:
ராகுல் காந்தி நாளை ஒரு பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்வுக்காக கூடலூர் வருகிறார். இதற்காக நான் உட்பட நிர்வாகிகள் வரவேற்கவும் அந்த பணிகளை திட்டமிட்டு வருவதாகவும், இந்த ஆண்டு மகத்தான பொங்கலாக மக்களுக்கு மாற வேண்டும் என்றார்.
ஆட்சி அரிகாரத்தில் பங்கு இல்லை என திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது தொடர்பாக பதில் அளித்த அவர், கூட்டணி தொடர்பாக அவருடைய கருத்தை தான் அமைச்சர் பெரியசாமி பேசி இருக்கிறார். ஆனால் கூட்டணிக்கு தலைமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. முதலமைச்சர் அனைத்து முடிவுகளும் எடுப்பார்.
த.வெ.க தலைவர் விஜய் சி.பி.ஐ வலையில் சிக்கி இருக்கிறார் என்றும், சிங்கம் வாயில் சிக்கி இருப்பது போல விஜய் க்கு நிலைமை மாறிவிட்டது. இதில் தமிழக அரசே நன்றாக தான் விசாரணை செய்தததாக குறிப்பிட்டார். பல மாநிலத்தில் பா.ஜ.க வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால் அவர்களின் ஊழல் வழக்குகள் அனைத்தும் மாறிவிட்டு புண்ணியம் செய்ததுபோல் மாற்றிவிடுவதாக தெரிவித்தார்.
தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடர்பாக வரும் 18 அன்று டெல்லியில் ராகுல் தலைமையில் கூட்டம் நடக்கிறது. தேர்தல் நேரத்தில் இது வழக்கமான பணிகள் என தெரிவித்தார். அதேபோல் பாரசக்தி திரைப்படம் தொடர்பாக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்தது தொடர்பாக பேசிய அவர், திரைப்படத்தில் காட்டி இருப்பது கடந்தகால வரலாறு அவ்வளவு தான். ஆனால் தேசிய கொடியை பல ஆண்டுகள் என 2002 வரை ஏற்றாமல் இருந்தது தான் பா.ஜ.க என குறிப்பிட்டு விமர்சித்தார்.
திருச்சி வேலுசாமி தொடர்ந்து பல கருத்தை விமர்சித்து தான் பேசி வருகிறார். அனால் காங்கிரஸ் கட்சிக்குள் எதையும் பேசுவதில்லை. ஆனால் வெளியில் தான் தொடர்ந்து பேசு வருகிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் அகில இந்திய தலைமைக்கு தெரிவித்து இருப்பதாகவும் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் அமையுமா என்ற கேள்வி கேட்டபோது, தற்போது நடப்பதே காங்கிரஸ் ஆட்சி தான் என பதில் அளித்தார்.
![]()





