செய்திகள்

அமெரிக்க போலீசாரால் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

Makkal Kural Official

உடலைக் கொண்டு வர உதவிட மத்திய அரசுக்கு பெற்றோர் கடிதம்

வாஷிங்டன், செப். 19–

அமெரிக்காவில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வந்த தெலுங்கானாவை சேர்ந்த மாணவரை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசின் உதவியை அவரது குடும்பத்தினர் நாடியுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்த முகமது நிஜாமுதீன் (வயது 30), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புளோரிடா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வந்தார். மேலும், கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் விடுதி அறையில் உடன் இருந்தவரை கத்தியால் குத்தியதற்காக நிஜாமுதீனை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 3ம் தேதி நடந்த நிலையில், 2 வாரங்களுக்குப் பிறகே நிஜாமுதீனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நிஜாமுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:–

‘‘கடந்த செப்டம்பர் 3ம் தேதி சாண்டா கிளாராவில் உள்ள விடுதியில் உடன் இருந்தவரை நிஜாமுதீன் கத்தியால் குத்தியுள்ளார். அறையில் இருந்த நண்பரை பல முறை கத்தியால் குத்தி நிஜாமூதின் காயப்படுத்தியுள்ளார்.இதுதொடர்பாக போலீஸ் அவசர எண் 911க்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்ததில், அறையில் ஒருவர் கத்தியுடன் மற்றொருவரை பிடித்து வைத்திருந்ததால், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நிஜாமூதின் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அறையில் காயங்களுடன் மீட்கப்பட்டவர் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சாண்டா கிளாரா மாவட்ட நீதிமன்றமும், சாண்டா கிளாரா போலீசாரும் கூட்டு விசாரணையை நடத்தி வருகின்றன’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனவெறியால் பாதிப்பு

நிஜாமுதீன் இனவெறியால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக லிங்க்டுன் தளத்தில் நிஜாமுதீன் வெளியிட்ட பதிவையும் குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர். அந்த பதிவில், இன வெறுப்பு, இன துன்புறுத்தல், சித்திரவதை, ஊதிய மோசடி, தவறான பணிநீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். அமெரிக்கர்களின் வெள்ளை மேலாதிக்கம் மற்றும் இனவெறி மனநிலை முடிவுக்கு வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் தொடர்ந்து துப்பறியும் நபரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் நிஜாமுதீன் குற்றம்சாட்டியிருந்தார். நிஜாமுதீனின் தந்தை, தனது மகனுக்கும் அறை தோழனுக்கும் இடையே ஒரு சிறிய விஷயத்திற்காக ஏற்பட்ட கைகலப்பை அடுத்து போலீசார் அவரை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளார்.

என்கவுண்டர் :

முழு விசாரணை

இந்த நிலையில் நிஜாமுதீனின் குற்றச்சாட்டு மற்றும் அவரது என்கவுன்டர் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், சாண்டா கிளாரா மருத்துவமனையில் உள்ள அவரது உடலை இந்தியாவுக்கு எடுத்துவர உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உதவியை பெற்றோர்கள் நாடியுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:– எனது மகன் நிஜாமுதீன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள ஏதோ ஒரு மருத்துவமனையில் இருப்பதாகவும் அறிந்தேன். போலீசார் அவரை சுட்டுக் கொன்றதற்கான உண்மையான காரணங்கள் எனக்குத் தெரியவில்லை. வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தையும், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தையும் தனது மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *