வாஷிங்டன்: அக்.19
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றபோது, அரசின் பொருளாதார கொள்கைகளில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அரசு செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளும், வெளிநாடுகள் அமெரிக்க தயாரிப்புகளுக்கு விதிக்கும் வரிக்கு இணையான வரிகளை அமெரிக்காவும் விதிப்பதையும் அவர் அறிவித்தார்.
அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்யும் அதிகாரத்தை வலுப்படுத்துவது, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவது, திருநங்கையரின் பாலின அடையாளத்தை அங்கீகரிக்க மறுப்பு, ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை போன்ற முடிவுகளும் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த நடவடிக்கைகளின் பின்னர், பல அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், ஏழை அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீட்டு நிதி பெருமளவில் குறைக்கப்பட்டது. இதற்கு எதிராக அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 2,500க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் வீதி இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
“இங்கு யாரும் மன்னர் அல்ல” என்று வலியுறுத்திய போராட்டக்காரர்கள் வாஷிங்டனுக்குச் செல்லும் வடக்கு வர்ஜீனியா மேம்பாலங்களில் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில் மூத்த எம்பி பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குப் புறமும் டிரம்ப் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
டிரம்பின் பதில்:
இந்த போராட்டங்கள் குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில், “இந்த போராட்டங்கள் அர்த்தமற்றவை. அவர்கள் என்னை மன்னராக கூறுகின்றனர், ஆனால் நான் மன்னர் அல்ல; அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அமெரிக்க நலனுக்காகவே நான் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்” என்று கூறினார்.
டிரம்புக்கு ஆதரவாக குடியரசுக் கட்சித் தலைவர்கள் போராட்டக்காரர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர். “அமெரிக்காவை வெறுப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேரணிகளை நடத்துகின்றனர்” என்று சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்தார்.
இதற்கு மாறாக, ஜனநாயகக் கட்சியினர் போராட்டங்களை ஆதரித்ததுடன், போராட்டக்காரர்கள் அமைதியாக இருந்து தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.
![]()





