வாஷிங்டன், ஜூலை 27–
அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து மியாமி புறப்பட்ட பயணிகள் விமானத்தின் டயரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், விபரீதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விமானத்தில் 173 பயணிகள் 6 விமான ஊழியர்கள் பயணித்த நிலையில், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் சிலருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மேற்கு அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் விமான நிலையத்தில் இருந்து மியாமிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று புறப்பட்டது. 173 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் பயணித்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் டயரில் தீ விபத்து நேரிட்டு பெரும் புகை சூழ்ந்தது. இதனையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு அவசர வெளியேற்றம் வழியாக பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
லேன்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகள் விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். எங்கள் விமான பராமரிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. மேலும் விமானப் பணிக் குழுவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளது.
![]()





