வாஷிங்டன், டிச. 14–
அமெரிக்காவில் ரோட்தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் ரோட்தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.
துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் மாணவ மாணவிகள் உள்பட பலரும் அலறியடித்து ஓடினார்கள். எனினும், இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடைய நிலைமை சீராக உள்ளது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் பற்றி அறிந்து அந்த பகுதிக்கு சென்று, நிலைமையை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரவுன் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அனைவரும் அந்த பகுதியை தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். பலியானவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதுபற்றி பிராவிடென்ஸ் துணை காவல் அதிகாரி டிம் ஓஹரா கூறும்போது, கருப்பு உடையில் வந்த ஆண் ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கிறார் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த நபர் எப்படி பல்கலைக்கழகத்தின் உள்ளே நுழைந்துள்ளார் என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் நடத்தியவர் கருப்பு நிற உடை அணிந்த ஒரு ஆண் என்றும், அவர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பிரவுன் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழங்களில் ஒன்றாகும். ஏழு மாடி கட்டடத்தில் பொறியியல் மற்றும் இயற்பியல் துறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட லேப்கள் இங்குள்ளன.
டிரம்ப் கண்டனம்
பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்.பி.ஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் தொடர்ந்து அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி, நைட் கிளப் உள்பட அனைத்து பொது இடங்களிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. இதற்கு அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் அதிகப்படியான துப்பாக்கிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()




