செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடி: வலுப்பெறும் இந்திய – ரஷ்ய வர்த்தகம்!

Makkal Kural Official

ஆர். முத்துக்குமார்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 50% கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா தனது வர்த்தகக் கொள்கைகளை பன்முகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா களம் இறங்கி விட்டது.

மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா வர்த்தகக் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்ய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ‘மேக் இன் இந்தியா’ போன்ற முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இந்தத் திட்டங்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எண்ணெய் இறக்குமதி

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, இந்தியாவின் மீது மட்டுமல்லாமல், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு கொண்ட பிற நாடுகளான பிரேசில் மீதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு, இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறிவைத்து, உக்ரைன்-ரஷ்ய மோதலுக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவளிப்பதாக அமெரிக்கா கருதுவதால் விதிக்கப்பட்டதாக தெரிகிறது. 2024-25 நிதியாண்டில், இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 35% ரஷ்யாவிடமிருந்து வந்தது, இது 2018-இல் 1.3% ஆக இருந்ததை விட கணிசமான உயர்வு. இந்த சலுகை விலை எண்ணெய் இறக்குமதியால், இந்தியா ஆண்டுதோறும் சுமார் 10 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தியுள்ளது என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) மதிப்பிடுகிறது.

எனினும், இந்த வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதி துறைகளை, குறிப்பாக ஆடை, நகை மற்றும் ரத்தின ஏற்றுமதிகளை கடுமையாக பாதிக்கலாம். இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு, கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு 47% ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இந்த வரி உயர்வு தொழில்துறையை பின்னடைவுக்கு உள்ளாக்கும் என்றும் எச்சரிக்கிறது.

ஆனால், இந்தியா ரஷ்யாவுடனான எண்ணெய் இறக்குமதியை நிறுத்தவில்லை என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஏ.எஸ். ஷானே தெளிவுபடுத்தியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சகமும், இந்த வரி விதிப்பு “நியாயமற்றது” என்று விமர்சித்து, இறக்குமதி முடிவுகள் சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை என்று வலியுறுத்தியுள்ளது.

புதிய உச்சத்தில் இந்தியா, ரஷ்யா வர்த்தகம்

2024-25 நிதியாண்டில், இந்தியா-ரஷ்யா வர்த்தகம் 68.7 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது, இது 1995-இல் 1.4 பில்லியன் டாலராக இருந்ததை விட பெரும் முன்னேற்றம். இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், ரஷ்யாவின் சலுகை விலை கச்சா எண்ணெய் இறக்குமதி. இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு, மருந்து மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்ய, ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவின் எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் முதலீடு செய்கின்றன.

மாஸ்கோவில் நடைபெற்ற 26-வது இந்தியா-ரஷ்யா இடையேயான அரசு-தொழில்துறை ஒத்துழைப்பு கமிஷன் (IRIGC-TEC) கூட்டத்தில், அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக ஏற்றத்தாழ்வை (58.9 பில்லியன் டாலர்) குறைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கை எட்டுவதற்கு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.

‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்பு

இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்பு, ரஷ்ய நிறுவனங்களுக்கு இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைப்பதற்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது, குறிப்பாக பசுமை தொழில் நகரங்களில். ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பிராந்தியத்தில் (Far East Region) இந்திய முதலீடுகளை அதிகரிக்க இந்தியா ஆர்வம் காட்டுகிறது. இப்பகுதி, இயற்கை வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான வாய்ப்புகளால் நிரம்பியுள்ளது. ரஷ்யாவின் இறக்குமதி மாற்றுத் திட்டத்திற்கு இந்தியாவின் உற்பத்தி திறன் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக பிஸ்டன்கள், விமான உதிரிபாகங்கள், ஜவுளி மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் போன்ற துறைகளில். இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் பொருளாதார நன்மைகளை உருவாக்குவதோடு, அமெரிக்காவின் வரி அழுத்தத்தை எதிர்கொள்ள உதவும்.

அமெரிக்கா, இந்தியாவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக இருந்தாலும், வரிகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பதட்டங்கள் இந்தியாவுக்கு வர்த்தக சார்பின் அபாயத்தை உணர்த்துகின்றன. இதற்கான மாற்று வழியாக, இந்தியா ரஷ்யா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுடன் வலுவான பொருளாதார உறவுகளை உருவாக்குகிறது.

அதன் விளைவாகவே பிரதமர் மோடி ‘கிழக்கு நோக்கி’ என்ற அறைகூவலுடன் அடுத்த வாரம் சீனாவில் நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் தானே நேரில் சென்று பங்கேற்க்கப் போவதாக அறிவித்து விட்டார். அதற்கு ஒரு நாள் முன்பே ஜப்பானுக்கும் சென்று அந்நாட்டு பிரதமரையும் சந்தித்துப் பேசயிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *