செய்திகள்

அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் துன்பம் அடைந்துள்ளனர்: வெனிசுலா இடைக்கால அதிபர் காட்டம்

Makkal Kural Official

கராகஸ், ஜன. 6–

வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் துன்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி, அந்நாட்டு படைகளால் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (63) மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் (69) ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டார்.

துப்பாக்கிச்சூடு

இதனிடையே வெனிசுலாவின் கராகசில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. வெனிசுலாவில் அதிபர் மாளிகை மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கராகசில் பலத்த துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. ட்ரோன் அல்லது விமான சத்தங்களும் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் துணை அதிபர் கூறுகையில், நான் துக்கத்துடன் இருக்கிறேன். எங்கள் நாட்டின் மீதான சட்டவிரோத அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வெனிசுலா மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு நான் வருத்தம் அடைகிறேன். இரண்டு ஹீரோக்கள் கடத்தப்பட்டு இருக்கின்றனர் என்றார்.

நான் குற்றவாளி அல்ல

நியூயார்க் நீதிபதி முன்பு ஆஜரான நிக்கோலஸ் மதுரோ, தனது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

நீதிமன்றத்தில் மதுரோ பேசுகையில், ”போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் நான் குற்றவாளி அல்ல. நான் இன்னும் ஒரு நாட்டின் ஜனாதிபதி தான். நான் நிரபராதி. நான் ஒரு கண்ணியமான மனிதன். என்னைச் சிறை பிடித்துவிட்டனர்” என தெரிவித்தார்.

போதைப்பொருள் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர்கள் என மதுரோவும், அவரது மனைவியும் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கின்றனர். இந்த வழக்கில் இதுவரை நீதிபதி ஆல்வின் ஹெலெர்ஸ்டைன் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த வழக்கில் அடுத்த விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.தற்போது அவர்கள் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், வெனிசுலா 30 நாட்களுக்குள் அடுத்த தேர்தலை நடத்த முடியாது என்றும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்பாக அந்த நாட்டை கண்டிப்பாக மறுகட்டமைப்பை செய்ய வேண்டியுள்ளது” என்று கூறினார்.

ஐ.நா. கவலை

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடத்த கொலம்பியா கோரிக்கை வைத்தது.இதனைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீனா, கொலம்பியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் உரையை துணைப் பொதுச் செயலாளர் ரோஸ்மேரி டிகாப்லோ வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

நாடுகளின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய கொள்கைகளை மதிக்க வேண்டும். நாட்டில் நிலைத்தன்மை மேலும் தீவிரமடையக்கூடும் என்பது குறித்தும், அதனால் பிராந்தியத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும், நாடுகளுக்கு இடையேயான உறவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதற்கு இது முன்னுதாரணமாக அமையக் கூடும் என்பது குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் பேசுகையில், அமெரிக்க நீதித்துறையால் குற்றம்சட்டப்பட்ட இரண்டு தேடப்படும் குற்றவாளிகளான மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தால் எடுக்கப்பட்ட துல்லியமான சட்ட அமலாக்க நடவடிக்கை ஆகும். அந்நாட்டு மக்களுக்கு எதிராக எந்தப் போரும் இல்லை. நாங்கள் அந்நாட்டைக் கைப்பற்றவில்லை எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *