செய்திகள்

அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி

Makkal Kural Official

ஓ.பி.எஸ், சசிகலாவை சேர்க்கமாட்டோம்

டெல்லி, ஜன.8–

அண்ணா தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருச்சியில் அவரை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அமித்ஷா, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை 10 நாட்களுக்குள் இறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்பிலான பா.ம.க. நேற்று இணைந்தது எனவும் கூறப்படுகிறது.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்னவெல்லாம் செய்வது? என்பது பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசிப்பதற்காக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட அவர் மாலை 5.30 மணி அளவில் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அங்கிருந்து நேராக ஒரு தனியார் ஓட்டலுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் இரவு 9.30 மணிக்கு டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அமித்ஷாவுடன் சந்திப்பு 11.25 மணி வரை நடந்தது. கூட்டணி விவகாரங்கள், தொகுதி பங்கீடு விவகாரங்கள், இன்னும் கூட்டணியில் இடம்பெற வருகை தரும் கட்சிகள் பற்றிய விவரங்கள் பற்றி அவர்கள் பேசியுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து புதுடெல்லி விமான நிலையத்தில் இன்று காலை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-–

மேலும் கட்சிகள் வரும்

நேற்று இரவு 9.30 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தமிழகத்தை பொறுத்த வரைக்கும் தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும் என்பதற்காக அண்ணா தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது. 2026-ம் ஆண்டு தேர்தலில் அண்ணா தி.மு.க.– பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெறும். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். மேலும் பல கட்சிகள் சேர இருக்கிறது.

அண்ணா தி.மு.க. கூட்டணி வலிமையாக இருக்கிறது. இதனால் தான் 2021ல் 75 இடங்களில் எங்களது கூட்டணி வெற்றி பெற்றது. வெறும் 2 லட்சம் ஓட்டுகளில் 43 தொகுதிகளை இழந்துவிட்டோம்.

தி.மு.க.வை வீழ்த்துவோம்

சென்னையில் கிராண்ட் சோழா ஹோட்டலில் முதல்முறையாக எங்களது கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், நானும் இணைந்து பேட்டி கொடுத்தோம். அப்போது அமித்ஷா உள் கட்சி விவகாரங்களில் தலையிடமாட்டோம் என்று சொல்லிவிட்டார். அதன்படி தொடர்ந்து அப்படிதான் நடந்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி எங்களது கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று தி.மு.க. வாக்குறுதி கொடுத்தது. அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தவுடன் புதிதாக ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது. இது அரசு ஊழியர்களை ஏமாற்றக்கூடிய நாடகமாக தான் பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் ஏமாற்றுவேலை

மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்துக்கும், தமிழக அரசு ஓய்வூதியத் திட்டத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பெயரை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள். தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை. பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு கிடையாது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் கடன் பல மடங்கு அதிகரித்து விட்டது. திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.

இவ்வாறு எடப்பாடி கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இணைய வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, திருப்பி,திருப்பி கேட்டீர்கள் என்றால் அதற்கு ஒரே வரி, அதுக்கு இங்கே இடமில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். மீண்டும், மீண்டும் அரைத்த மாவையை அரைக்க வேண்டாம். இதோடு 50 முறை சொல்லிவிட்டேன். டில்லியிலும் நான் சொல்லிவிட்டேன். உங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக கேட்கிறீர்கள்.

சசிகலா, ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அண்ணா தி.மு.க.வில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. சசிகலா, ஓபிஎஸ் இல்லாமலே அண்ணா தி.மு.க. வலுவாக உள்ளது. அண்ணா தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக ஒரு போதும் தலையிடாது. அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இணைந்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் அண்ணா தி.மு.க. தலைமையில் தான் ஆட்சி. தமிழகத்தில் கூட்டணிக்கு அண்ணா தி.மு.க. தான் தலைமை என்பதில் மாற்றமில்லை.

அமித்ஷா வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வந்த போது நான் 2 கூட்டங்களில் கலந்து கொள்ள வேணடியிருந்தது. எனவே அவரை தமிழகம் வந்த போது சந்திக்கவில்லை. கூட்டணி அமைப்பது தொடர்பாக பிற கட்சிகளுடன் பேசி வருகிறோம். யாருடன் பேச்சுவார்த்தை என்ற கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க முடியாது. பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் ஏற்பட்டதும் முறையாக அறிவிக்கப்படும் என்றார்.

அண்ணா திமுக கூட்டணியில் தினகரனை மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் வரும். அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. சேரும்போது உங்களை அழைத்து சொல்வோம் என்று எடப்பாடி கூறினார்.

எடப்பாடி பழனிசாமி கூறுவதை பார்க்கும்போது, டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் இணைக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவே தெரிகிறது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை இணைக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அந்த கூட்டணியில் சேரமாட்டேன் என்று கூறிவந்த டிடிவி தினகரன், சமீபத்தில் தஞ்சாவூரில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது, “தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்பதெல்லாம் எனது கண்களுக்கு தெரியாது ” என்று கூறியிருந்தார். இதனால், கூட்டணி விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகிய இருவரும் இறங்கிவருவதுபோல் தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *