செய்திகள்

அமித்ஷாவை இன்று சந்திக்கும் எடப்பாடி

Makkal Kural Official

புதுடெல்லி, செப். 15–

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.

2026 சட்டமன்ற தோ்தலில் வெற்றி பெற அண்ணா தி.மு.க.விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாள்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும்; இல்லையென்றால் பிரிந்தவர்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்திருந்தார். செங்கோட்டையனின் இந்த செயல்பாட்டை தொடர்ந்து, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி நீக்கினார். இதனையடுத்து செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். செங்கோட்டையன் விடுத்திருந்த கெடுவும் நேற்றுடன் நிறைவடைந்தது.

இப்படியான பரபரப்பான சூழலில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், தனபால், இன்பதுரை ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

மேலும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனையும் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி உடன் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.

ஜெயலலிதா மறைந்த பின்னர், ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்த பாஜவுக்கு நன்றி என்று நேற்றைய தினம் எடப்பாடி கூறியிருந்த நிலையில், அவரின் இன்றைய டெல்லி பயணம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *