சென்னை, டிச. 5:
அண்ணா தி.மு.க.வில் உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையை அவரிடம் எடுத்துக் கூறினேன். அவர் தன்னுடைய அன்பான வார்த்தைகளைக் கூறி அனுப்பினார்.
அண்ணா தி.மு.க.வை எம்ஜிஆர் எந்த நோக்கத்தில் உருவாக்கினாரோ, ஜெயலலிதா அந்த இயக்கத்தை எப்படி வெற்றிகரமாக வழிநடத்தி நிலைநிறுத்தினாரோ அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். அதுவே தமிழக மக்களின் கருத்தாகவும் இருக்கிறது என்பதை அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கிறேன்.
பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன். அண்ணா தி.மு.க.வில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.நான் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தனிக் கட்சியைத் தொடங்குவேன் என்று சொல்லவில்லை என்று தெரிவித்தார்.
அண்ணா தி.மு.க.வை ஒன்றிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம், வருகிற டிசம்பர் 15ம் தேதிக்குள் என்ன முடிவை அறிவிக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
![]()





