திருவண்ணாமலை, டிச. 15:
‘அன்போடு வந்தால் அரவணைப்போம், ஆணவத்துக்கு அடிபணியமாட்டோம்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
1980 ஜூலை 20-ந் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞர் அணியை கருணாநிதி தொடங்கினார்.
தி.மு.க. இளைஞர் அணி உருவாக்கிய பின்னர் ஐவர் குழு, பின்னர் 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அதில் நானும் ஒருவன். நாங்கள் தமிழ்நாடு முழுவதும் கிராமம், கிராமமாக சென்று இளைஞர்களை சந்தித்து தி.மு.க. கொள்கைகளை எடுத்து கூறினோம். மக்களை சந்தித்து கழகத்தை வளர்த்தோம்.
இப்போது அந்த பணியை உதயநிதியிடமும், உங்களிடமும் ஒப்படைத்துள்ளோம். உதயநிதியும் பொறுப்பை உணர்ந்து பவர்புல்லாக செயல்படுகிறார். கொள்கை எதிரிகள் உதயநிதி ‘மோஸ்ட் டேஞ்சரஸ்’ என்று புலம்புகிறார்கள்.
இன்று தொழில்நுட்பம் அதிகரித்து விட்டது. அந்த அளவுக்கு உங்கள் கடமையும் பெருகிவிட்டது. பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைத்திருக்கின்ற ஆணவத்தில் பொய்களை, அவதூறுகளை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க முயற்சிக்கிறார்கள்.
இதனை தடுக்க நமது கொள்கைகளை தீவிரமாக பரப்பவேண்டும். அவர்கள் பொய் பேச தயங்காத போது உண்மையை பேச நாம் ஏன் தயங்க வேண்டும். நமது தோளில் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியை காக்க வேண்டிய கடமை மட்டும் இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவையும் காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
பா.ஜ.க.வுக்கு எதிராக போராடும்
ஒரே கட்சி தி.மு.க.
இந்தியாவிலேயே பா.ஜ.க.வுக்கு எதிராக போராடி கொண்டிருக்கின்ற ஒரே கட்சி தி.மு.க. தான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது தமிழ்நாடு மட்டும் தான். அதனால் தான் அமித்ஷா போன்றவர்களுக்கு எல்லாம் நம் மீது எரிச்சல். அண்மையில் அமித்ஷா, பீகாரில் வெற்றி பெற்று விட்டோம். அடுத்த இலக்கு தமிழ்நாடு தான் என்று கூறுகிறார்.
அமித்ஷா, நீங்கள் அல்ல உங்கள் படையை கூட்டி வந்தாலும் உங்களால் இங்கு எதுவும் நடக்காது. இது தமிழ்நாடு. எங்களுடைய கேரக்டரை புரிந்து கொள்ள மாட்றீங்க. அன்போடு வந்தால் அரவணைப்போம். ஆணவத்தோடு வந்தால் அடிபணியமாட்டோம். எதிர்த்து நிற்போம்.
மக்களுக்காக இருப்பது தான் அரசியல். அந்த அரசியல் செய்ய தான் உங்கள் எல்லாருக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசியலில் சொகுசு எதிர்பார்க்க கூடாது. கடுமையாக உழைப்பவர்களுக்கு தான் இடம் கிடைக்கும்.
கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை, குற்றங்களை துரோகங்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்கள் திரும்பி வந்தால் தமிழ்நாடு என்னென்ன ஆபத்துகளை சந்திக்கும் என்று மக்களுக்கு சொல்லுங்கள். நாடே திரும்பி பார்க்கின்ற நமது திட்டங்களை எடுத்து செல்லுங்கள். நான் உறுதியோடு சொல்கிறேன்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், விடியல் பயணம், மாணவ-மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திராவிட மாடல் அரசின் சாதனைகளை புத்தகமாக அச்சிடும் அளவிற்கு ஏராளமானவற்றை செய்திருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம். மத்திய அரசு வெளியிடும் அனைத்து அறிக்கையிலும் தமிழ்நாடு தான் முதலிடம். இதனை எல்லாம் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
மற்ற கட்சியை விட உங்களுக்கு என தனி ஸ்டைல் இருக்க வேண்டும். தி.மு.க.விற்கு ஓட்டு போடாதவர்கள் கூட இளைஞர்அணி செயல்பாட்டால் ஓட்டு போடும் எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அ.தி.மு.க.வினர் உத்தமர் போன்று வந்து ஓட்டு கேட்பார்கள். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்ற பா.ஜ.க.வினர் பொய் பரப்புரை பரப்புவார்கள்.
2026 சட்டசபை தேர்தலில் மக்கள் முன்னாடி இருக்கக்கூடிய கேள்வி இன்னும் 50 ஆண்டுகள் முன்னோக்கி நடைபோட போகிறோமா?, இல்லை, பின்னோக்கி இழுக்க முயற்சிப்பவர்களுக்கு அடி பணிய போகிறோமா? அந்த கேள்விக்கு மக்கள் அளிக்கப்போகின்ற விடை தான் திராவிட மாடல் ஆட்சி 2.0. அதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தி.மு.க.வின் எதிர்காலத்தில் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
![]()





