செய்திகள்

அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி சீர் திருத்தம்: புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

Makkal Kural Official

புதுடெல்லி,செப். 22–

ஜிஎஸ்டி சீர் திருத்தம் தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஎச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 3-ந் தேதி டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மக்களுக்கு பயன்படும் முறையில் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.

மற்ற பொருட்களுக்கு 5 மற்றும் 18 சதவீதம் என்ற 2 அடுக்கு மட்டுமே வரி நிர்ணயம் செய்யப்பட்டது. அதே நேரம் அதிக ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீத வரி இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன. 391 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விதிகங்கள் மாற்றப்பட்ட நிலையில், அவற்றில் 357 பொருள்களுக்குத் விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி குறைந்திருக்கிறது.

முன்பு 28 சதவிகித வரி விதிக்கப்பட்ட ஏ.சி., பிரிஜ், வாஷிங் மிஷின், டிஷ் வாஷர் மற்றும் பெரிய திரைகளைக்கொண்ட டி.வி.கள் இப்போது 18 சதவிகிதமாகக் குறைந்திருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது. இதனால், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க திட்டமிட்டிருந்த மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் 18% நிலையான வரி வரம்பிலேயே உள்ளன, இதனால் அவற்றின் விலைகள் பெரும்பாலும் மாற்றமின்றி உள்ளன.

அடுத்து, 12 சதவிகிதமாக இருந்த விடுதிக்கான ஜிஎஸ்டி 5 சதவிகிதமாகக் குறைந்திருப்பதால், ரூ.7500 வரை கட்டணம் கொண்ட தங்கும் விடுதி அறைகள் வாடகை ரூ.525 வரை குறைகிறது. புகையிலை மற்றும் அது தொடர்புடைய பொருள்கள் 28 சதவிகித வரியுடன் சேர்த்து செஸ் வரி விதிக்கப்படும்.

வரி முற்றிலும் நீக்கம்

வரைபடங்கள், சார்ட், பென்சில், அழிப்பான்கள், கிரையான்ஸ், நோட்டுப் புத்தகம், முட்டை, தயிர், லஸ்ஸி, பொட்டலமிடப்படாத உணவு தானியங்கள், கோதுமை மாவு, மைதா, காய்கறிகள், பழங்கள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள், தேர்வு செய்யப்பட்ட உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கும் இனி ஜிஎஸ்டி வரி இல்லை.

விலை குறையும் பொருட்கள்

இந்த அறிவிப்பின் காரணமாக, பல உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்குப் பெறுகின்றன.

வரி விலக்கு காரணமாக சப்பாத்தி, பரோட்டா, பன்னீர், காக்ரா, பிட்சா ரொட்டி, பதப்படுத்தப்பட்ட பால் வகைகள், ஐஸ்கிரீம் விலை குறைகிறது. சாக்லேட்டுகள், ரெடிமேட் பாஸ்தா, நூடுல்ஸ், உலர் பழங்கள், நொறுக்குத்தீனி, இறைச்சி, ஜாம், கெட்ச் சப், காபி, பழச்சாறுகள், சோயா பால் ஆகியவை 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால், அவற்றின் விலையும் குறைகிறது. நெய், வெண்ணெய் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால் 1 கிலோ நெய் ரூ. 40 வரை குறையும்.

சோப்பு, டூத் பேஸ்ட், ஷாம்பு போன்ற பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால் விலை குறையும். பானை, குக்கர், தட்டு, கரண்டி, அடுப்பு, கண்ணாடி, கத்தி, மேசை கரண்டி விலை குறையும்.

தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. முதல்படியாக, இந்திய ரயில்வேயில் விற்பனை செய்யப்படும் ரெயில் நீர் இன்று முதல் ரூ.15லிருந்து ரூ.14க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரை லிட்டர் குடிநீர் பாட்டில் விலையும் ரூ.10ல் இருந்து ரூ.9 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

சிமெண்ட் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் வரை குறைகிறது.

சைக்கிள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால், சராசரியாக 1,000 முதல் 3,500 ரூபாய் வரை விலை குறையும்.

கார், ஸ்கூட்டர் விலை குறைகிறது

ஆடம்பர கார்களை தவிர 1,200 ‘சிசி’க்கும் குறைவாக உள்ள கார்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால் அதன் விலையும் குறைகிறது. இதேபோல 350 உட்பட்ட ‘சிசி’க்கு இருசக்கர வாகனம் மீதான வரி, 28ல் இருந்து 18 ஆக குறைந்து விட்டது. அதனால் அதன் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறையும்.

அந்த வகையில் இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா வாகனங்களின் விலை 1.56 லட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொலேரோ, நியோ ரகங்களின் விலை ரூ.1.27 லட்சம், எக்யுவி3எக்ஓ (பெட்ரோல்) விலை ரூ.1.4 லட்சம், தார் 2டபிள்யுடி (டீசல்) விலை ரூ.1.35 லட்சம் குறையும். மேலும், ஸ்காா்பியோ கிளாசிக்கின் விலை ரூ.1.01 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.டாடா மோட்டாா்ஸ் 65,000 முதல் 1.45 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது. அதாவது டியாகோவின் விலை ரூ.75,000 டிகோரின் விலை ரூ.80,000, ஆல்ட்ராஸின் விலை ரூ.1.10 லட்சம் குறைகிறது. மேலும், பஞ்ச் எஸ்யுவியின் விலை ரூ.85,000 நெக்ஸானின் விலை ரூ.1.55 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. பிரீமியம் எஸ்யூவிகளான ஹாரியா் மற்றும் சபாரி வாகனங்களின் விலைக் குறைப்பு முறையே ரு.1.4 லட்சம் மற்றும் ரூ.1.45 லட்சமாக இருக்கிறது.

மருத்துவ உபகரணங்கள், தெர்மா மீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், ரத்த சர்க்கரை ஆகியவற்றை கண்டறியும் கருவிகள், சில மருந்துகள், மாத்திரைகள் ஆகியவற்றின் விலை குறைகிறது. மூக்கு கண்ணாடி, லென்சுகள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்படி தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், NCH செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி குறித்த நுகர்வோர்களின் புகார்களை 1800–11–4000 என்ற எண்ணில் அளிக்கலாம். அதேபோல, https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் ஜிஎஸ்டி குறித்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *