செய்திகள்

அமமுகவில் இருந்து மாணிக்கராஜா நீக்கம்: ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

Makkal Kural Official

சென்னை, ஜன. 23–

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜவை கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

அண்ணா தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு மாணிக்கராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக மாணிக்கராஜவை அமமுகவில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அ.ம.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மாணிக்கராஜா தி.மு.க.வில் இணைந்தார். இவருடன் அ.ம.மு.க.வின் குமரி மேற்கு மாவட்ட செயலர் ரத்தினராஜ், மத்திய மாவட்ட செயலர் டெல்லஸ், தென்காசி வடக்கு மாவட்ட செயலர் ராமச்சந்திர மூர்த்தி உள்ளிட்டோரும் தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து மாணிக்கராஜா பேசியதாவது:–

தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் இணைந்துள்ளோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்ற கொள்கையே இல்லாமல் போயுள்ளது. 8 ஆண்டுகள் கஷ்டபட்டு வளர்த்த அ.ம.மு.க.வை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அ.ம.மு.க. தலைமை கேட்கவில்லை.

இதன்பிறகும் அக்கட்சியில் தொடர்வது சரியாக இருக்காது. பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி தி.மு.க.வில் இணைந்துள்ளோம். 3 மாவட்ட செயலாளர்கள் தற்போது வந்துள்ளார்கள். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையில் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி உள்ளோம்” என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *