செய்திகள்

அபிராமபுரம் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருடிய ஆசாமி கைது

Makkal Kural Official

சென்னை, அக். 12–

அபிராமபுரம் பகுதியில் இருவேறு வீடுகளில் பூட்டை உடைத்து 22 பவுன் தங்கநகைகள் மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஆர்.எ புரம், வள்ளீஸ்வரன் தோட்டம், பி பிளாக் பகுதியில் வசித்து வரும் ராஜா என்பவர் பழைய பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் உஷா வீட்டை பூட்டிவிட்டு, மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல, சென்னை, ஆர்.எ புரம், வள்ளீஸ்வரன் தோட்டம், ஏ பிளாக் பகுதியில் வசித்து வரும் சரவணன் என்பவர் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் சரஸ்வதி வீட்டை பூட்டிவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த சுமார் 2 கிராம் தங்க கம்மல் மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.

இருவேறு சம்பவங்கள் குறித்து, ராஜா மற்றும் சரவணன் ஆகியோர், அபிராமபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், அபிராமபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தீவிர விசாரணை செய்து, மேற்படி இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து தங்கநகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடிய தங்கநகைகள் உருக்கிய நிலையில் 157.970 கிராம் (சுமார் 19½ சவரன்) எடை கொண்ட தங்ககட்டி மற்றும் பணம் ரூ.1 லட்சமும், புகார்தாரர் சரவணன் வீட்டிலிருந்து திருடிய 1.730 கிராம் எடை கொண்ட தங்ககம்மல் ஆகியவை மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சரவணன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *